பொலிஸ் திணைக்களத்தை மறுசீரமைக்க வேண்டும் !!
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் சில அதிகாரிகள் குற்றவாளிகளின் பணியாளர்களாக இருப்பதாக வெளிவரும் தகவல்களைக் கேட்கும்போது, குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டு இருக்கும் நடவடிக்கைகள் போன்றே பொலிஸ் திணைக்களத்தையும் முறையான மறுசீரமைப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
“மக்கள் பாதுகாப்பு தொடர்பில் தோற்றுவித்திருக்கும் மோசமான நிலைமை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு மக்களின் பாதுகாப்பையும் பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரையும் பாதுகாத்துக் கொள்வதற்கு தாமதமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது தினம் தோறும் கேட்கக் கூடிய கொடூர மனித கொலை சம்பவங்கள் சமூகத்தை அச்சுறுத்தக் கூடியவையாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னிலையில் இடம் பெறும் இதுபோன்ற குற்றங்களை உன்னிப்பாக கவனிக்கையில் , இதுபோன்ற குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் பிரயோகித்திருக்கும் வழிமுறைகளின் மீது திருப்தி அடைய முடியாது என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
அதேபோன்று குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான முதன்மை பொறுப்புடைய குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் சில அதிகாரிகள் குற்றவாளிகளின் பணியாளர்களாக இருப்பதாக வெளிவரும் தகவல்களைக் கேட்கும்போது குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டு இருக்கும் நடவடிக்கைகள் போன்றே பொலிஸ் திணைக்களத்தையும் முறையான மறுசீரமைப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்பது தெரிய வருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் மக்கள் பாதுகாப்பு அமைச்சரும், பொலிஸ் ஆணைக்குழுவும் பொலிஸ்மா அதிபரும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்
நாட்டினுள் இடம்பெறும் குற்றங்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கான முதலாவது நகர்வை பொலிஸாரே மேற்கொள்ள வேண்டும்.
நாட்டில் இடம்பெறும் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும், ஊழல்களில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளின் மீதும் முறையான நடவடிக்கை மேற்கொள்ள பொறுப்புடையவர்கள் விரைவில் கவனம் செலுத்துவர் என எதிர்பார்க்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.