திருப்பதியில் நாளை கருட சேவை: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் 3-வது நாளான நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் முத்து பந்தல் வாகனத்தில் 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 4-வது நாளான இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை கல்ப விருட்ச வாகன சேவை நடைபெற்றது. மாட வீதியில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று மாலை 3 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் மாலை மேளதாளம் முழங்க பெரிய ஜூயர் மண்டபத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
பின்னர் ஆண்டாள் மாலை தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கப்படுகிறது. இதையடுத்து இரவு சர்வ பூபால வாகனம் சேவை நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மேலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர். இன்று மாலை முதல் நாளை இரவு வரை மலை பாதையில் பைக்குகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். திருப்பதியில் நேற்று 64,277 பேர் தரிசனம் செய்தனர். 24,340 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.89 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.