2024 ஜனவரி மாதம் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல்: பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்!!
342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாட்டு மக்களவையில் 272 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இவையன்றி 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் அந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2018 ஜூலை மாதம் அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் இம்ரான் கானின் கட்சி முழு பெரும்பான்மையிடங்களுக்கு குறைவாக இடங்களை பிடித்தது. இருப்பதற்குள்ளேயே அதிக இடங்களில் வென்ற கட்சி என்பதால் அவர் சில கட்சிகளுடன் ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்தார். கடந்த ஏப்ரல் 10 அன்று அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விளைவாக, பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக நஆட்சியை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, 2022 ஏப்ரல் மாதம், ஷெஹ்பாஸ் ஷரீஃப் பிரதமராக பதவியேற்றார்.
அவரது பிரதமர் பதவி காலம், 2023 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்ததையடுத்து இடைக்கால பிரதமராக அன்வர்-உல்-ஹக் கக்கர் என்பவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அந்நாட்டுக்கான பொதுத்தேர்தல் குறித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் எந்த அறிக்கையும் அளிக்காமல் இருந்து வந்ததால் அரசியலில் குழப்பம் நிலவியது. இந்நிலையில், 2024 ஜனவரி மாத கடைசி வார காலகட்டத்தில் பாகிஸ்தானின் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. அந்நாட்டின் தொகுதி சீரமைப்புக்கான முதல் பட்டியல் இம்மாதம் 27 அன்று வெளியிடப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தபட்டவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்ட பிறகு இறுதி பட்டியல் நவம்பர் 30 அன்று வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு பிறகு 54-நாள் தேர்தல் பணிகள் நடைபெற்ற பிறகு ஜனவரி கடைசி வாரம் தேர்தல் நடைபெறும் என கூறியுள்ளது. அந்நாட்டில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப் கட்சியும், ஷெஹ்பாஸ் ஷரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் பிலாவால் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் பிரதான கட்சிகளாகும்.