;
Athirady Tamil News

இந்தியா-கனடா உறவில் பதற்றம்: இதன்மூலம் சீனா எப்படி பலன் அடையும்?!!

0

கனடாவில் வெளிநாட்டு தலையீடு இருப்பதான விஷயம் தொடர்பாக அங்குள்ள எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. கனடாவின் உள்விவகாரங்களில் சீனாவும் ரஷ்யாவும் தலையிடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

அதனால்தான் கனடாவுடனான சீனா மற்றும் ரஷ்யாவின் உறவுகளில் பதற்றம் நிலவுகிறது. ஆனால் காலிஸ்தான் சார்பு சீக்கிய தலைவரும், கனடாவின் குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் உளவுத்துறை ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இப்போது குற்றம் சாட்டியுள்ளார்.

வெளிநாடுகளின் தலையீடு விவகாரத்தில் முன்பு சீனா மற்றும் ரஷ்யாவின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அடுத்து தற்போது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக கனேடிய ஊடகங்களில் கூறப்படுகிறது.

எனினும் கனடாவின் இந்தக் குற்றச்சாட்டை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அத்துடன், தனது நிலத்தில் காலிஸ்தானியர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது தொடர்பான பிரச்னையை திசை திருப்பவே கனடா இத்தகைய இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் கூறியுள்ளது.

வெளிநாடுகளின் தலையீடு விவகாரத்தில் முன்பு சீனா மற்றும் ரஷ்யாவின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் தடம் புரண்டன. இந்நிலையில், மேற்குலக நாடுகளுக்கு சவால்விட சீனாவுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு என்று கூறப்படுகிறது.

இந்த முழு சர்ச்சையையும் சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்று கனேடிய ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது.

இந்த முழு விஷயத்திலும் சர்வதேச ஆதரவைத் திரட்டும் பணியில் கனடா ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தற்போது இந்த சர்ச்சையில் சீனாவும் நுழைந்துள்ளது. ஜி20 மாநாட்டின் போது பிரதமர் மோதி மற்றும் ட்ரூடோ இடையிலான சந்திப்பின்போதே இதற்கான அறிகுறிகள் கிடைத்துவிட்டதாக ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக எழுதும் குளோபல் டைம்ஸ் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

“மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகளின் பாதுகாவலர்கள் என்று கூறுகின்றன. அதற்காக மற்ற நாடுகளை தினமும் விமர்சிக்கின்றன. ஆனால் இந்திய ஜனநாயகம் என்று தன்னை கூறிக்கொள்ளும் நாட்டை அவை பாராட்டுகின்றன.

இது முக்கியமாக புவி-அரசியல் நலன்கள் மற்றும் சீனாவுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலில் இந்தியாவையும் சேர்த்துக் கொள்ளும் ஆசையால் தூண்டப்படுகிறது,” என்று குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது.

இந்தியா – கனடா விவகாரத்தை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்று கனேடிய ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தியாவுக்கும் அதன் ஜனநாயகத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மேற்கத்திய நாடுகள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளன. ஆனால் தங்கள் சொந்த நலனுக்காக, இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் உள்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களைக் கண்டும் காணாமல் இருக்கின்றன என்றும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

மேற்குலகின் இந்த இரட்டை வேடம், அதன் போலித்தனத்தை அம்பலப்படுத்த உதவுகிறது என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே அதிகரித்து வரும் சர்ச்சையில் இருந்து சீனா பயனடையலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இப்போது வரை கனடாவில் வெளிநாட்டு தலையீடு தொடர்பான குற்றச்சாட்டு, பெரும்பாலும் சீனாவை மையமாகக் கொண்டிருந்தன. சீனா தனது ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாக கனடா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

ஆனால் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தொடர்பு பற்றிய குற்றச்சாட்டுகள் இந்தக் கதைக்கு ஒரு புதிய திசையை அளித்துள்ளன.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் தகராறு காரணமாக மேற்கத்திய நாடுகளிடையே பரபரப்பு நிலவுவதாக கூறப்படுகிறது.

கனேடிய செய்தி இணையதளமான டொராண்டோ ஸ்டாரில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், வில்லனோவா பல்கலைக்கழகத்தின் சார்லஸ் விகர் சட்டப் பள்ளியில், சர்வதேச சட்டத்தின் உதவிப் பேராசிரியரான பிரஸ்டன் ஜோர்டன் லிம், இந்த முழு சர்ச்சை மீது சீனா எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை விளக்குகிறார்.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் தகராறு காரணமாக மேற்கத்திய நாடுகளிடையே பரபரப்பு நிலவுகிறது. ஏனெனில் சீனாவுக்கு எதிரான ஒற்றுமையை அது குறைக்கும் என்று ஜோர்டன் லிம் கூறுகிறார்.

அமெரிக்க தலைமையின் கீழ் பேசப்படும் பிராந்திய பாதுகாப்பில், இந்தியாவின் பலவீனமான நிலை காரணமாக சீனாவுக்கு பலன் கிடைக்கும் என்கிறார் அவர்.

இந்தியாவுக்கு எதிராக கனடாவால் உறுதியான ஆதாரங்களை வழங்க முடிந்தால், அது வெளிநாட்டு தலையீட்டை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும் என்று பிரஸ்டன் ஜோர்டன் லிம் கூறுகிறார்.

சீனா கூட இப்படி வெளிப்படையாகச் செயல்படுவதில்லை. உய்குர் முஸ்லிம்களை ஷின்ஜியாங்கிற்கு மீண்டும் கொண்டு வருவதற்காக சீன ஏஜெண்டுகள் கடத்தல்களில் ஈடுபட்டது உண்மைதான். இந்த விஷயத்தில் இந்தியாவின் பங்கு வெளிச்சத்திற்கு வந்தால் அது நிலைமையைத் தலைகீழாக மாற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.

சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் நீண்டகாலமாக பதற்றம் நிலவி வருகிறது.

சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் நீண்டகாலமாக பதற்றம் நிலவி வருகிறது. சீனா தனது உள்விவகாரங்களில் தலையிடுவதாக கனடா குற்றம் சாட்டிவருகிறது.

இந்தோனீசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தெளிவாகத் தெரிந்தது.

அப்போது ஷி ஜின்பிங், ஜஸ்டின் ட்ரூடோ மீது கோபமாக இருந்தார். ட்ரூடோவிடம் தான் பேசியது நாளிதழில் கசிந்ததால் அவர் கோபமடைந்தார்.

ஷி ஜின்பிங், ஜஸ்டின் ட்ரூடோவை வசைபாடிய வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் ஷி ஜின்பிங் ஜஸ்டின் ட்ரூடோவிடம், “முன்பு நடந்த உரையாடலை நீங்கள் ஊடகங்களில் பகிர முடியாது. இது முற்றிலும் சரியானது அல்ல. தூதாண்மை இப்படிச் செயல்படாது,” என்று கூறினார்.

“நாம் எதைப் பற்றி பேசினோமோ அது செய்தித்தாளில் கசிந்துள்ளது. இது முற்றிலும் சரியானது அல்ல. இது பேச்சுவார்த்தைக்கு சரியான வழி அல்ல,” என்றும் அவர் கூறினார்.

பொது இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் ஷி ஜின்பிங், இந்தோனீசியாவில் முற்றிலும் வித்தியாசமாகத் தெரிந்தார்.

சீனாவின் எழுச்சிக்கு எந்த சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் வழிவகுத்தனவோ அவற்றை நிராகரிக்க சீனா முயல்வதாக கனடா கூறியுள்ளது

இந்தோ பசிபிக் விவகாரத்திலும், சீனாவும் கனடாவும் எதிரெதிராக உள்ளன.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைப் போலவே, கனடாவும், இந்தோ-பசிபிக் பகுதியில் இந்தியாவை ஒரு முக்கிய சக்தியாகப் பார்க்கிறது.

இவை ஜனநாயக நாடுகள் என்பதாலும், பொதுவான விழுமியங்களைக் கொண்டிருப்பதாலும், கனடாவிற்கு இந்தியா முக்கியமானது.

கனடா தனது இந்தோ-பசிபிக் உத்தியில், ’சீனா ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் உலக சக்தியாக உள்ளது’ என்று கூறியுள்ளது. எனவே சீனாவை எதிர்கொள்ள தன் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதே கனடாவின் உத்தியாக இருக்கும்.

சீனாவின் எழுச்சிக்கு எந்த சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் வழிவகுத்தனவோ அவற்றை நிராகரிக்க சீனா முயல்வதாக கனடா தனது உத்தியில் கூறியுள்ளது. சீனா அதை ராணுவமயமாக்கும் விதமும், இங்குள்ள கடல் மற்றும் வான் வழிகளைக் கட்டுப்படுத்த விரும்பும் விதமும், சர்வதேச ஒழுங்குமுறைக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

சீனா தனது பொருளாதாரம், தூதாண்மை, ராணுவம் மற்றும் தொழில்நுட்ப திறன்களை அதிகரிக்க இங்கு பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது.

இந்த உத்தியில் இந்தியாவை தனது இயல்பான கூட்டாளியாக கனடா கருதுகிறது. ஆனால் நிஜ்ஜார் கொலை சர்ச்சைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் தூரம் கனடாவின் இந்த வியூகத்தைப் பலவீனப்படுத்தும். சீனாவை எதிர்கொள்வதற்காகக் கட்டமைக்கப்பட்ட ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும்.

கனடாவுடனான வளர்ந்து வரும் சர்ச்சை பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் உறவுகளையும் பாதிக்கலாம்.

நிஜ்ஜாரின் கொலைக் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. கனடாவின் விசாரணை முன்னோக்கி நகர்ந்து குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது.

கனடாவுடனான வளர்ந்து வரும் சர்ச்சை பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் உறவுகளையும் பாதிக்கலாம். ஏனெனில் இந்த நாடுகளில் சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

கனடா எழுப்பியுள்ள தீவிர கவலைகளை மிகவும் கவனமாக செவிமடுப்பதாகவும், விசாரணை முடிவதற்காக காத்திருப்பதாகவும் பிரிட்டன் கூறுகிறது.

தற்போது மேற்கத்திய நாடுகள் விசாரணை முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் இந்தியாவின் கை இதில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மேற்கத்திய நாடுகள் என்ன செய்யும் என்பது தற்போதுள்ள ஒரு கேள்வி.

இது சட்டத்தின் ஆட்சியின் கொள்கையை ஆதரிப்பது அல்லது அரசியல் தேவைகளை ஆதரிப்பது என்ற இரண்டில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பது போன்றது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டின் போது மோதிக்கும் ட்ரூடோவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, வான்கூவரின் சர்ரேயில் ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ என்ற பிரிவினைவாத அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தியாவில் எண்பதுகளின் காலகட்டத்தில் சீக்கிய பிரிவினைவாதிகளின் தனிநாடு கோரும் இயக்கம் வேகமெடுக்கத் தொடங்கியது.

கடந்த 1984 ஆம் ஆண்டு சீக்கிய பிரிவினைவாதிகள் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியை கொன்றனர். இதற்குப் பிறகு சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கை கணிசமாக அதிகரித்தது.

இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு ராணுவத்தை அனுப்பினார். பொற்கோவில் சீக்கியர்களின் புனித தலம். ஆயுதம் தாங்கிய சீக்கிய தீவிரவாதிகள் பொற்கோவிலில் திரண்டிருந்தனர்.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்று அழைக்கப்பட்ட இந்த முழு நடவடிக்கையில், இந்திய ராணுவத்தின் 83 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 248 வீரர்கள் காயமடைந்தனர். இதுதவிர வேறு 492 பேரின் இறப்பு உறுதி செய்யப்பட்டது. 1,592 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது நடந்து ஓராண்டு கழித்து 1985இல், கனடாவில் வசிக்கும் சில ‘காலிஸ்தானி’ பிரிவினைவாத குழுவினர்’ ஏர் இந்தியா விமானத்தில் குண்டுவெடிப்பை நடத்தினர்.

டொராண்டோவில் இருந்து லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு அதில் இருந்த 329 பேரும் உயிரிழந்தனர். கனடாவில் நடந்த மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் படுகொலையாக இது பார்க்கப்படுகிறது.

ஜஸ்டின் ட்ரூடோ அரசு சீக்கிய பிரிவினைவாதிகளிடம் மென்மையாக நடந்துகொள்வதாக இந்திய அரசு கருதுகிறது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு 2005ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் இரண்டு சீக்கிய பிரிவினைவாதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் பல சாட்சிகள் இயற்கையாக மரணமடைந்தனர் அல்லது கொலை செய்யப்பட்டனர் அல்லது சாட்சியமளிக்க விடாமல் மிரட்டப்பட்டனர்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு இந்த ஆண்டு மேலும் மோசமடைந்தது. சில மாதங்களுக்கு முன்பு பிராம்ப்டனில் நடந்த அணிவகுப்பில் ஒரு அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தது.

முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி ரத்தக்கறை படிந்த சேலையில் காட்டப்பட்டிருந்தார். தலைப்பாகை அணிந்தவர்கள் அவரை நோக்கி துப்பாக்கிகளை நீட்டியபடி இருந்தனர். “ஸ்ரீ தர்பார் சாஹிப் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கல்” என்று வாகனத்தில் இருந்த பலகையில் எழுதப்பட்டிருந்தது.

கடந்த சில மாதங்களில் கனடாவிலும் லண்டனிலும் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளின் படங்கள் கொண்ட சுவரொட்டிகளை ஒட்டி அவர்களை குறிவைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை நிறுத்துமாறு அப்போது இந்தியா கனடாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதுபோன்ற சம்பவங்களை எதிர்ப்பதாகவும் இந்தியா கனடாவிடம் கூறியது.

ஜஸ்டின் ட்ரூடோ அரசு சீக்கிய பிரிவினைவாதிகளிடம் மென்மையாக நடந்துகொள்வதாக இந்திய அரசு கருதுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.