;
Athirady Tamil News

மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் என்ன?!!

0

அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் நோக்கில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவை சட்டமாக்குவதில் மத்திய அரசு மட்டுமில்லாமல் அரசியல் கட்சிகளும் சோதனை சந்திக்க வேண்டிவரும்.

பிற துறைகளைப் போலவே, அரசியலிலும் ஆண்களே அதிஅம் ஆதிக்கம் மேலோங்கி செலுத்துகின்றனர். இதன் காரணமாக இடஒதுக்கீடு மூலம் பெண்கள் அரசியலுக்கு வருவதை ஆதரிப்பதில் இருந்து அரசியல்வாதிகள் பலமுறை பின்வாங்கி உள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு 1992-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வருவது தொடர்பாக ஒருமித்த கருத்தை ஏற்படுத்த மூன்று தசாப்தங்கள் ஆகி உள்ளன.

பெண்களுக்கு அரசியல் புரிதல் இல்லாததால், அவர்களுக்கு இந்த இடஒதுக்கீட்டை வழங்கக்கூடாது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

அத்துடன், இடஒதுக்கீட்டின் பயனாக உள்ளாட்சி பிரதிநிதிகளாக பெண்கள் வந்தாலும், பெயர் அளவில் மட்டும்தான் அவர்கள் பதவிகளில் இருப்பதாகவும், அவர்களின் கணவரே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.

இந்த நிலையில், இடஒதுக்கீட்டின் மூலம் பெண்கள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஆக வந்தால், அவர்களின் செயல்பாட்டில் அவர்களது கணவரின் தலையீடு இல்லாமல் இருக்குமா என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்படுகிறது.

உள்ளாட்சிகளில் பெண்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைத்த அனுபவங்களில் இருந்து நாம் பாடம் கற்ற வேண்டும் என்பது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ்
‘உள்ளாட்சிகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்’

பெண்கள் திறமையற்றவர்கள் என்று சாக்குப்போக்கு கூறி, அவர்கள் அதிகாரத்துக்கு வருவதை ஆண்கள் தடுக்கின்றனர் என்றும், இத்தகைய சூழலில் கடுமையான உத்தரவுகளை பிறப்பிப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறுகிறார் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரும், பா.ஜ.க செய்தித் தொடர்பாளருமான லலிதா குமாரமங்கலம்.

இதுகுறித்து அவர் பிபிசியிடம் கூறும்போது, “பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பாக கட்சியின் வலிமையான தலைவராக உள்ள நரேந்திர மோதியிடம் இருந்து தகவல் வரும்போது ஆண்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

ஆனால், உள்ளாட்சிகளில் பெண்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைத்த அனுபவங்களில் இருந்து நாம் பாடம் கற்ற வேண்டும் என்பது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவின் கருத்தாக உள்ளது.

உள்ளாட்சிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும், அதை முழுமையாக பயன்படுத்தி கொள்ள அவர்கள் தயாராக இல்லை. இதன் விளைவாக அவர்கள் பதவியை மட்டும் தான் பெற்றனர். ஆனால் அதிகாரம் அவர்களின் கணவரிடம் இருந்தது என்கிறார் சுஷ்மிதா தேவ்.

புனேவில் உள்ள கார்வே இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சர்வீஸின் (Karve Institute of Social Service) இணைப் பேராசிரியராக இருப்பவர் டாக்டர் நாக மணி ராவ்.

பெண் பிரதிநிதித்துவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளவரான இவர், பெண்களின் தலைமைத்துவத்தை வளர்ப்பது பெரிய சவாலாக இருப்பதாக கண்டறிந்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, பெண்கள் அரசியல் இயக்கங்களில் பங்கேற்கின்றனர். ஆனால் ஆண்களைப் போல அரசியல் கட்சிகளில் தங்களின் பங்களிப்பை அவர்கள் செலுத்துவதில்லை.

இத்தகைய நிலையில், பெண்கள் எம்.பி. அளவிலான தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகளும் மாற வேண்டும் என்கிறார் அவர்.

“முடிவெடுக்கும் நிலையிலான உயர் பதவிகளில் எத்தனை பெண்களை நியமித்துள்ளோம்? என்ற கேள்வியை இந்த நேரத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும்,” என்று சுஷ்மிதா தேவ் வலியுறுத்துகிறார்.

2021-ல் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட பெண்களுக்கு 40% இடங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு 2021-இல் தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட பெண்களுக்கு 40% இடங்கள் வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்திருந்தார்.

ஆனால் அவரது இந்த அறிவிப்புக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில், 2021 தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சிக்கு ஏழு எம்.எல்.ஏக்கள் இருந்தனர். ஆனால் 2021 தேர்தலில் அக்கட்சி வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன இருவரில், ஆராதனா மிஸ்ராவும் ஒருவர். காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரியின் மகளான இவர், மூன்றாவது முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத் கூறும்போது, சில முடிவுகள் கட்சி அரசியலுக்கும், லாப நஷ்டத்துக்கும் அப்பாற்பட்டவை. உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 40% இடம் அளித்தது என்ற காங்கிரசின் முடிவும் அப்படியானது தான் என்கிறார் அவர்.

இதுகுறித்து அவர் பிபிசியிடம் கூறும்போது, “காங்கிரஸின் இந்த முடிவு, பிற அரசியல் கட்சிகள் மத்தியிலும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியது,” என்கிறார் சுப்ரியா ஸ்ரீநேத்.

உத்தரப் பிரதேச மாநில மகளிர் காங்கிரஸின் துணைத் தலைவரான உருசா ராணா, உன்னாவ் மாவட்டத்தின் பூர்வா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஆனால் அந்த அனுபவத்தில் இருந்து தான் கற்றுக்கொண்ட பாடங்கள், தேர்தல் களத்தில் அடுத்தமுறை சிறப்பாக போட்டியிட உதவும் என்று கூறுகிறார் அவர்.

“காங்கிரஸின் இந்த முயற்சி மிகப்பெரிய விஷயம். ஆனால் முறையாக திட்டமிட்டு பெண்களுக்கு சீட் அளிக்கப்படவில்லை. இந்த முடிவை செயல்படுத்த பல பெண்களுக்கு சீட் கொடுக்கப்பட்டது,” என்கிறார் உருசா.

இடஒதுக்கீடு அமல்படுத்தியபின், அரசியல் கட்சிகள் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் லலிதா குமாரமங்கலம்.

“தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தங்களது முழு பலத்தை பிரயோகிக்கும். இது பெண் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்,” என்றும் அவர் கூறுகிறார்.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை சட்டமாக்கும் முயற்சிகள் இதற்கு முன்பும் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 2010-இல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது, நாடாளுமன்ற மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மக்களவையில் போதிய ஆதரவு கிடைக்காததால், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா அப்போது சட்டமாக்கப்படவில்லை.

ஆனால், இந்த முறை இந்த மசோதா நிறைவேறி இருக்கிறது.

இருப்பினும், மக்கள்தொகை கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறை அல்லது எல்லை நிர்ணயம் இதில் ஒரு தடையாக உள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாக்கப்பட்டாலும், தொகுதிகள் மறுவரையறைக்கு பின்புதான் இச்சட்டம் செயல்படுத்தப்படும்.

“மகளிர் இடஒதுக்கீட்டை சட்டப்படி உறுதி செய்யும் முயற்சிதான் தற்போது வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் இன்னும் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது” என்கிறார் சுஷ்மிதா தேவ்.

தொகுதி மறுவரையறை அல்லது எல்லை நிர்ணயம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவது பெரிய சவாலான விஷயமாக இருக்கும் என்று தேவ் கூறுகிறார்.

மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகளை நிர்ணயம் செய்வதே இந்த செயல்முறை. ஆனால் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ள மாநிலங்கள், தங்களது இடங்களை குறைக்க அஞ்சுகின்றன என்றும் கூறுகிறார் சுஷ்மிதா தேவ்.

எல்லை நிர்ணயத்துக்கான நிபந்தனைகள், இதில் பாஜகவின் நோக்கம் தவறாக உள்ளது என்பதையே காட்டுவதாக குற்றம்சாட்டுகிறார் காங்கிரசின் சுப்ரியா ஸ்ரீநேத்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுக்கிறார் பாஜக மாநிலங்களவை உறுப்பினரான சரோஜ் பாண்டே.

“எல்லை நிர்ணய செயல்முறையில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. அதை ஒத்திவைக்க அல்லது நிறுத்திவைக்க ஒரு காலக்கெடு இருக்கும். மகளிர் இடஒதுக்கீடு மசோதா அதன் இலக்கை அடையும் என்று நம்புகிறேன்,” என்று பாண்டே பிபிசியிடம் தெரிவித்தார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட பெண்களுக்கு 40 சதவீத் இடங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பெண்களை மேம்படுத்தி நற்பெயரை சம்பாதிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் விரும்புகின்றன.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது. உள்ளாட்சிகள் அளவில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முயற்சி முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டது.

நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர், நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகர், கட்சியின் முதல் பெண் தலைவர் என்று ஆட்சி, அதிகாரத்தில் உயர் பதவிகளில் பெண்களை நியமிக்கும் முடிவுகளை கடந்த காலங்களில் காங்கிரஸ் எடுத்துள்ளது.

மேற்கு வங்க மாநில சட்டமன்றத்துக்கு 2019 இல் தேர்தல் நடைபெற்றது. அதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட பெண்களுக்கு 40 சதவீத் இடங்கள் வழங்கப்பட்டன. அந்தத் தேர்தலில் அக்கட்சி மகத்தான வெற்றியும் பெற்றது.

“எங்கள் கட்சியின் அடையாளமாக மம்தா பானர்ஜி உள்ளார். இடஒதுக்கீடு இல்லாமலேயே அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்பது அவரின் விருப்பமாக இருந்திருக்கலாம். அதன் பயனாக மிமி சக்ரவர்த்தி, நுஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட பெண்கள் அரசியல் தலைவர்களாக வளர்ந்துள்ளனர்,” என்று கூறுகிறார் சுஷ்மிதா தேவ்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு அமலுக்கு வந்த பிறகு, அவர்களுக்கு அரசியலில் வாய்ப்பு கிடைப்பதில் அரசியல் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும்.

பல தசாப்தங்களாக ஆணாதிக்கத்தால் அரசியலில் உருவாக்கப்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கான உரிமை கோரலில், பெண்களின் மனஉறுதிக்கு கடுமையான சோதனை இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.