சம்பா சாகுபடி பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ. 560 கோடி இழப்பீடு.. மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!!
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிரில், 11.20 இலட்சம் விவசாயிகளால் 24.45 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டது. மொத்த காப்பீட்டுக் கட்டணத்தில் தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,375 கோடியும் ஒன்றிய அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.824 கோடியும் விவசாயிகளின் பங்குத் தொகையாக ரூ.120 கோடியும் ஆக மொத்தம் ரூ.2,319 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சி, வெள்ளம், புயல், பருவம் தவறிய மழை போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் சுமார் ஏழு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு திட்ட விதிமுறைகளின்படி பாதிப்படைந்த பகுதிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் 560 கோடி ரூபாய் சுமார் 6 லட்சம் தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.