2024 பொதுத் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த ஜனதா தளம்!!
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பொது தேர்தலை ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து தேர்தல் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
தொகுதி பங்கீடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி, “தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும்,” என்று தெரிவித்தார். எச்.டி. குமாரசாமி மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. “தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருக்க ஜனதா தளம் கட்சி முடிவு செய்து இருப்பது மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது. அவர்களை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். இது தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ‘புதிய இந்தியா, உறுதியான இந்தியா’ என்ற நோக்கத்தை வலுப்படுத்தும்,” என்று ஜெ.பி. நட்டா தெரிவித்து உள்ளார்.