தமிழகத்திற்கு வினாடிக்கு 4,673 கனஅடி நீர் திறப்பு: விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தீவிர போராட்டம்!!
சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு பெயரளவிலேயே கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளது. நேற்று கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 4,674 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலையில் இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 4,673 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதாவது கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து 2,673 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,845 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 97.02 அடியாக உள்ளது.
அதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணைக்கு 2,359 கன அடி நீர் வருகிறது. முழு கொள்ளளவு 84 அடி கொண்ட கபினி அணை நீர் மட்டம் 75.36 அடியாக உள்ளது. தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த நீர்வரத்தை கர்நாடக- தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு காந்திநகர், மைசூரு, மண்டியா, ராம்நகர், சாம்ராஜ் நகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சன ஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கண்டித்து மண்டியா நகரில் நாளை (23-ந்தேதி) முழு அடைப்பு போராட்டத்துக்கு மாவட்ட விவசாய சங்கம் மற்றும் இதரக்ஷணா கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு விவசாய சங்கத்தினர், கன்னட அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.