வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்!!
பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று வருகை தருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த மைதானம் 30 ஏக்கர் பரப்பளவில் ரூ.450 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. சுமார் 31 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. டிஸ்ப்ளே ஸ்கோர் போர்டு, பிளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், வி.ஐ.பி. ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் அமைய உள்ளது.
கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப்பகுதிகளும், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான படங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.