;
Athirady Tamil News

“வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்”: ஜெர்மனியின் ஹுவாய் தடைக்கு சீனா பதிலடி!!

0

மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கு வர்த்தகத்தில் பெரும்பங்களிப்பை சீனா வழங்கி வருகிறது. 5ஜி செல்போன் தொழில்நுட்பத்தில் ஜெர்மனிக்கு தேவைப்படும் அதி உயர்தொழில்நுட்பத்திற்கான முக்கிய பாகங்களையும் உதிரி பாகங்களையும் சீனாவின் முக்கிய நிறுவனங்களான ஹுவாய் (Huawei) மற்றும் இசட்.டி.ஈ. (ZTE) ஆகியவைதான் வழங்கி வருகிறது. தற்போது ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம், சீனாவின் தயாரிப்புகளால் தேசிய பாதுகாப்புக்கான ஆபத்துக்கள் வரக்கூடும் எனவும் அதனால் அதனை தடுக்கும் விதமாக 5ஜி தொழில்நுட்பத்தில் சீனாவின் ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ., ஆகியவற்றின் தயாரிப்புகளை முற்றிலும் தங்கள் நாட்டிலிருந்தே நீக்கிவிட முடிவு செய்திருக்கிறது.

“டீ ரிஸ்கிங்” (de-risking) எனப்படும் அபாயங்களிலிருந்து விலகி இருத்தலுக்கான இந்த முடிவின்படி ஜெர்மனியின் மென்பொருள் மற்றும் இணைய கட்டமைப்பில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த தளங்களிலிருந்தும் அந்நிறுவனங்களின் தயாரிப்புகளை நீக்க வேண்டும் என ஜெர்மனி முடிவெடுத்திருக்கிறது. மேலும், இனியும் அவற்றை இறக்குமதி செய்யவோ பயன்படுத்தவோ வேண்டாம் என உறுதியாக உள்ளது. அந்நாட்டிலேயே உள்ள சில முன்னணி அலைபேசி சேவை நிறுவனங்கள் இவற்றை எதிர்த்தாலும், அரசங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது. ஜெர்மனியில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களையும் இந்த இரு நிறுவனங்களின் தயாரிப்புகளிலிருந்து விலகியிருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.

பல்வேறு தொழில்நுட்பங்களிலும் உயர் தொழில்நுட்பங்களிலும் சீனா எனும் ஒரே நாட்டை சார்ந்திருப்பதை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் படிப்படியாக குறைத்து கொள்ள முடிவு செய்திருப்பதை தொடர்ந்து ஜெர்மனியும் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. “ஜெர்மனி உண்மையிலேயே எங்கள் நாட்டு தயாரிப்புகளால் அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து உள்ளதை நிரூபிக்காமல் இத்தகைய முடிவை எடுத்தால் நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்” என இத்தகவல் வெளியானதும் சீனா காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் கோவிட்-19 காலகட்டத்திலிருந்து உள்நாட்டு தயாரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக எடுக்கப்படும் முடிவுகள், தற்போது சீனாவை சார்ந்திருப்பதை உலகம் குறைத்து கொள்ள முன்வரும் வேளையில், இந்திய பொருளாதாரத்திற்கு பலனளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.