பல்கலைக்கழக படிப்பில் சேர 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்ற வாலிபர்!!
மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவை சேர்ந்தவர் மமதோ சபாயு பாரி. 25 வயதான இவருக்கு எகிப்தில் உள்ள புகழ்பெற்ற அல் அசார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக அவர் எகிப்துக்கு விமானத்தில் செல்ல பணம் இல்லாமல் தவித்தார். எனினும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக கடந்த மே மாதமே சைக்கிளில் எகிப்துக்கு பயணத்தை தொடங்கி உள்ளார். அங்கிருந்து மாலி, புர்கினா பாசோ, நைஜர், டோகோ, பெனின் உள்ளிட்ட நாடுகளை கடந்த போது 3 முறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் கல்வி பயில்வதற்காக சைக்கிளில் சென்றதை விளக்கியதை தொடர்ந்து போலீசார் அவரை விடுவித்துள்ளனர். பின்னர் அவரது கல்வி ஆர்வத்தை அறிந்து சிலர் உதவிகள் செய்துள்ளனர். மேலும் நிதி திரட்டி எகிப்துக்கு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து சூடானில் இருந்து கடந்த 5-ந்தேதி அல்அசார் பல்கலைக்கழகத்திற்கு சென்ற அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி அவர் விரும்பிய படிப்பில் சேர அனுமதி கிடைத்ததோடு அதற்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.