;
Athirady Tamil News

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை சிவனுக்கு அர்ப்பணிக்கிறேன்.. பிரதமர் மோடி!!

0

வாரணாசி தொகுதியில் உருவாக இருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகளை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதனை சிவபெருமானுக்கே அர்ப்பணிப்பதாக தெரிவித்து உள்ளார். “மகாதேவ் நகரில் அமையவிருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை மகாதேவுக்கே அர்ப்பணிக்கிறேன். இந்த மைதானத்தால், இங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயன்பெற முடியும். மேலும் இது பூர்வான்ச்சல் பகுதியில் புகழ்பெற்ற இடமாக மாறும்.

விளையாட்டுத் துறைக்கான உள்கட்டமைப்புகள் உருவாகும் போது, அது இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதோடு உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்,” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, வெங்சர்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் மட்டுமின்றி, பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, துணை தலைவர் ராஜீவ் சுக்லா, செயலாளர் ஜெய் ஷா மற்றும் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த மைதானம் அமைப்பதற்கான இடத்தை கையகப்படுத்த மாநில அரசு ரூ. 121 கோடியை செலவிட்டு இருப்பதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்து இருக்கிறது.

இந்த மைதானத்திற்கான கட்டுமானத்திற்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ. 330 கோடி செலவிடப்பட இருக்கிறது. இந்த மைதானத்தில் 30 ஆயிரம் பேர் அமர முடியும். மைதானத்தை அழகுப்படுத்தும் விதமாக ஆங்காங்கே உடுக்கை, வில்வம் இலைகள் போன்ற வடிவம் கொண்ட ரூஃப் கவர்கள் மற்றும் மின்விளக்கு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. பார்வையாளர்களின் அரங்கம் வாரணாசி நதியோரம் இருக்கும் படிக்கட்டுகளை போன்று காட்சியளிக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. இந்த மைதானம் 2025 டிசம்பர் மாதம் தயாராகி விடும் என்று தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.