உணவு ஆர்டருக்கு ரூ.3 கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் புகார்: விளக்கம் அளித்த ஸ்விக்கி நிறுவனம்!!
சமீபகாலமாக ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தவற்காக குறிப்பிட்ட உணவு நிறுவனங்களின் செயலிகளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர் செய்யும் போது ஒரு ஆர்டருக்கு 3 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிப்பதாக சில வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு விவாதமாகவே மாறியது. பயனர்கள் சிலர் தங்களது ஆர்டருக்கான பில் தொகையை பதிவிட்டு அதில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டினர்.
உணவு தொகையுடன் ஆர்டர் பேக்கிங் கட்டணம், டெலிவரி கட்டணம் மற்றும் வரிகள் அனைத்தையும் சேர்த்த பிறகும் இறுதி பில் தொகையில் ரூ.3 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக கிங்ஸ்லி என்ற பயனர் குறிப்பிட்டிருந்தார். இதே போல மேலும் சில வாடிக்கையாளர்களும் வலைதள பக்கங்களில் புகார் கூறியதை தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனம் இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், இது ஒரு காட்சி பிழையாக இருக்கலாம். பயனர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது என கூறி உள்ளது.