புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு!!
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். பெருமாளை வழிபடுபவர்கள் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வணங்குவார்கள். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளுக்கு கூடுதல் விசேஷமாகும். அதிலும் இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.
இதையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன. புரசைவாக்கம் வெள்ளாளல் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் மூலவருக்கு புஷ்ப அங்கி சேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பங்கேற்ற பக்தர்கள் கோவிந்தா…. கோவிந்தா… என கோஷம் எழுப்பி வழிபட்டனர். கோவில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கங்காதரன் செய்திருந்தார். இதேபோன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் திரண்டு பெருமாளை தரிசித்தனர்.