வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒத்துழைக்கும்.. மத்திய மந்திரி ஜெய்சங்கர்!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுசபையின் 78-வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், “இந்த ஆண்டு இறுதி வரையில், நாங்கள் தான் ஜி20-க்கு தலைமையாக இருப்போம். ஜி20 பதவிக்காலம் இருக்கும் போதும், முடிந்த பிறகும், நாங்கள் கூட்டாளியாகவும், பங்களிப்பாளராகவும், கூட்டணி அமைப்பவராகவும் எங்களுக்கே உரிய பாணியில் செயல்படுவோம். இதன் மூலம் மற்றவர்களையும் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள செய்வதில், நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம்.
எங்களது அனுபவங்கள் மற்றும் சாதனைகளை நல்ல விதத்தில் ஊக்கமளிக்கும் வகையில், பகிர்ந்து கொள்வோம்.” “இவை பல விதங்களில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு விவகாரத்தில், நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருந்து இருக்கிறோம். இந்த விவகாரத்தில் ஆப்பிரிக்க யூனியனை ஜி20-இல் இணைத்ததை நாங்கள் மேற்கோள் காட்ட விரும்புகிறோம். மேலும், இது தொடர்பான ஒத்துழைப்பு ஜி20-இல் மட்டுமின்றி அதை கடந்தும் தொடரும் என்றே நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.