ரூ.9ஆயிரம் கோடியில் சபரிமலைக்கு 2030-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரெயில் இயக்க திட்டம்!!
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் விரதமிருந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதத்தில் நடக்கும் மாதாந்திர பூஜையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.
சபரிமலை வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சபரிமலைக்கு மெட்ரோ ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணிகளை இந்திய ரெயில்வே தொடங்கியுள்ளது.
செங்கனூரில் இருந்து பம்பா வரை அமைக்கப்படும் ரெயில்பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. சபரிமலை மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற ரூ.9ஆயிரம் கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை 2030-ம் ஆண்டுக்குள் முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ரெயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்த 30 ஆண்டுகளில் சபரிமலை செல்லும் சாலைகளில் போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கும் என்பதால், புதிய பாதை தேவைப்படும். ஆகவே ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறைகள் மற்றும் மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்கு 2 ஆண்டுகள் ஆகும் என்று ரெயில்வே கணக்கிட்டுள்ளது. மேலும் புதிய பாதைக்கு நிலத்தை மாநில அரசு கையகப்படுத்த வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டால், 3 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும், 2030-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரெயில் செயல்பட தொடங்கும் எனவும் ரெயில்வே கருதுகிறது. சபரிமலைக்கு மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நங்கமாலி-எரிமேலி சபரி ரெயில் திட்டம் கடந்த 25 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.