முன்னாள் பெண் அதிபர் அலைபேசியுடன் கைது!!
கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியில் போலி ஆவணங்களை தயாரித்து இடைநிலை வகுப்புகளுக்கு மாணவிகளை அனுமதித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிப்பதற்காக விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்த பாடசாலையின் முன்னாள் அதிபர் , வாக்குமூலத்தை தன்னுடைய அலைபேசியில் இரகசியமாக பதிவு செய்த போது பொலிஸார் அதனை கைப்பற்றினர்.
முன்னாள் அதிபர் சனிக்கிழமை (23) காலை சட்டத்தரணி ஒருவருடன் பொலிஸாருக்கு வந்து கைப்பையில் அலைபேசியை மறைத்து வைத்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அவருடைய நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸார், அவருடைய கைப்பையை சோதனையிட்ட போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் கையடக்கத் தொலைபேசி பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் அதிலிருந்து பெறப்பட்ட அறிக்கையுடன் கையடக்கத் தொலைபேசி சாட்சியமாக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு மாணவிகளை அனுமதித்த வழக்கில் முன்னாள் அதிபரை சந்தேக நபராக பெயரிட்டதையடுத்து, அவரை மத்திய மாகாண கல்வித் திணைக்கள அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்ய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அவளிடம் 9 மணித்தியாலங்கள் சனிக்கிழமை (23) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (24) காலை மீண்டும் பொலிஸாருக்கு வருமாறு அறிவிக்கப்பட்டது.
கண்டி தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் திலக் சமரநாயக்கவின் பணிப்புரைக்கமைய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.