எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடைக்கால கொடுப்பனவு திறைசேரிக்கு!!
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதம் தொடர்பான இடைக்கால கொடுப்பனவாக 890,000 அமெரிக்க டொலர்கள் திறைசேரிக்கு கிடைத்துள்ளன.
இதற்கு மேலதிகமாக 16 மில்லியன் ரூபாவும் திறைசேரிக்கு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொகை மீனவர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் நாட்டின் கடற்கரையை சுத்தப்படுத்துவதற்காக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஏற்பட்ட செலவினமாகவும் வழங்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதி நிறுவனம் இது தொடர்பான கொடுப்பனவுகளை செய்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, எதிர்வரும் சில வருடங்களில் இந்த நாட்டில் வெளிநாட்டுக் கடன் வீதத்தை குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட அனைத்து கலந்துரையாடல்களும் இதுவரை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ருவன்வெல்ல பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.