;
Athirady Tamil News

திருப்பதியில் கோவிலுக்கு சொந்தமான மின்சார பஸ் திருட்டு!!

0

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் திருமலையில் இலவச பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. டீசல் பஸ்களை இயக்குவதால் திருமலை மாசு அடைந்து வருவதை தடுக்க தேவஸ்தானம் சார்பில் மின்சார பஸ்கள் வழங்க தொழிலதிபர்கள் முன் வரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து தொழிலதிபர்கள் ஒவ்வொரு பஸ்சும் ரூ.2 கோடி மதிப்பில் 10 மின்சார பஸ்களை தேவஸ்தானத்திற்கு வழங்கினார். இதனால் ஏற்கனவே திருமலையில் இயக்கப்பட்ட டீசல் பஸ்கள் நிறுத்தப்பட்டு மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

நேற்று இரவு இலவச பஸ்கள் பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. டிரைவர் பஸ் நிலையம் அருகே உள்ள ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார். இன்று அதிகாலை 3:30 மணிக்கு வந்த மர்மநபர் ஒருவர் மின்சார பஸ்சை திருடிக் கொண்டு சென்றார். திருப்பதி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாயுடு பேட்டை என்ற இடத்தில் பஸ் சென்ற போது பேட்டரியில் இருந்த மின்சாரம் தீர்ந்து போனது. இதனால் செய்வது அறியாது தவித்த மர்மநபர் பஸ் அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றார். ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டு இருந்த பஸ் டிரைவர் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான போக்குவரத்து அதிகாரி சேஷாத்திரி ரெட்டிக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் பஸ்ஸில் பொருத்தப்பட்டு இருந்த ஜிபிஆர்எஸ் கருவியை ஆராய்ந்த போது பஸ் நாயுடு பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உதவியுடன் நாயுடு பேட்டைக்கு சென்ற தேவஸ்தான அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ் மீட்டு திருமலைக்கு கொண்டு வந்தனர். மின்சார பஸ் திருட்டு போனது சம்பந்தமாக தேவஸ்தான போக்குவரத்து அதிகாரி சேஷாத்திரி ரெட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் பஸ் திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

திருப்பதியில் பிரமோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் பக்தர்களுக்காக இயக்கப்பட்டு வந்த மின்சார பஸ்ஸை திருடி சென்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் ஏற்கனவே பயணிகள் ஏற்றி சென்ற பஸ் உணவு இடைவேளைக்காக பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது மர்மநபர் ஒருவர் பஸ் எடுத்துக்கொண்டு பஸ்ஸில் இருந்த பயணிகளிடம் டிக்கெட் பணம் வசூலித்துக் கொண்டு பாதி வழியில் நிறுத்தி விட்டு சென்ற சம்பவத்தில் கொள்ளையனை இதுவரை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.