காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் 26-ந்தேதி முழு அடைப்பு போராட்டம்!!
தமிழகம்-கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக போதிய மழை பெய்யாத காலக்கட்டத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துபோனதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது. இதனால் காவிரி நீரை நம்பி இருக்கும் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை. ஏற்கனவே இதுபோல் தண்ணீர் திறக்க அறிவுறுத்தியும் கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை.
இதனால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கர்நாடக அரசு முழுமையாக தண்ணீர் திறக்க மறுத்து பெயரளவிலேயே கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மண்டியா மாவட்டத்தில் மட்டும் 20 நாட்களுக்கும் மேல் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர்.
மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்காக பெங்களூருவில் வருகிற 26-ந் தேதி (நாளை மறுநாள்) முழுஅடைப்பு போராட்டம் நடத்த கர்நாடக நீர் பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது. அன்றைய தினம் காலையில் டவுன்ஹாலில் இருந்து மைசூரு வங்கி வரை பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பெங்களூரு சுதந்திர பூங்காவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ள முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள் என 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்திற்கு பா.ஜ.க, மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும் வாடகை கார்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், கர்நாடக சினிமா வர்த்தக சபை, தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளன.
கர்நாடக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், பெங்களூருவில் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்து கடைகள் மற்றும் அவசர சேவைகள், அரசு அலுவலகங்கள், மெட்ரோ சேவைகள், போக்குவரத்து சேவைகள், அவசர சேவைகளை தவிர்த்து தகவல் தொழில்நுட்பத் துறை, வங்கித் துறை, வணிக நிறுவனங்கள், பல்வேறு துறைகள், தொழில் அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகளின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. ஆனால் இந்த விவகாரத்துக்கு எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூசுகின்றன. எனவே முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் அவசியம் இல்லை.
மாநில நலனை காப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. எனவே பெங்களூரு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து தவறிழைக்கக்கூடாது. சட்டம்-ஒழுங்கை யாரும் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள், சினிமா சங்கங்கள், எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் அரசு தலையிடாது. போராட்டங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. நாங்கள் எங்கள் கடமையை செய்து வருகிறோம். எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் புதிய தெம்புடன் அரசியல் செய்ய தொடங்கி உள்ளனர். ஆனால் நாங்கள் விவசாயிகளை காப்பாற்றி இருக்கிறோம். காவிரி விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன. காவிரி கர்நாடகத்தின் சொத்து அல்ல என்று தி.மு.க. நிர்வாகி ஒருவர் பேசி இருக்கிறார்.
காவிரி தென்னிந்தியா முழுமைக்கும் சொந்தமானது. இவ்வாறு அவர் கூறினார். பெங்களூருவில் நாளை மறுநாள் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மேட்டூர் அருகே உள்ள தமிழக-கர்நாடகா எல்லை நுழைவாயில், ஓசூர் அருகே உள்ள நுழைவு வாயில், ஈேராடு மாவட்டம் தாளவாடி நுழைவுவாயில் வழியாக தமிழக பஸ்கள் மற்றும் கனரக, இலகு ரக வாகனங்கள் இயக்கப்படாது என தெரிகிறது. எல்லையில் உள்ள சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.