;
Athirady Tamil News

வயநாடு தொகுதியில் போட்டியிட கூடாது: ராகுல்காந்திக்கு கம்யூனிஸ்டு ‘திடீர்’ எதிர்ப்பு!!

0

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது ராகுல்காந்தியை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்டது. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் ராகுல்காந்தி வயநாடு தொகுதிக்கு தனி கவனம் செலுத்தி வந்தார். அதே போல வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் ராகுல்காந்தி இந்த தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த சூழ்நிலையில் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த முறை வயநாடு தொகுதியை காங்கிரஸ் தங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி விரும்புகிறது.

இதனால் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்ள திட்டமிட்டு உள்ளது. மேலும் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் பா.ஜ.க.வை எதிர்த்து களம் இறங்கவேண்டும் என விரும்புவதாக கம்யூனிஸ்டு கட்சிகள் தெரிவித்து உள்ளன. டெல்லியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமைக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள பிரிவு அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கும். எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கருதுகிறது.

இந்தியக் கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்டுக்கு எதிராகப் போட்டியிடுவது எதிர்மறையாகக் கருதப்படலாம் என்று அந்த கட்சி கூறுகிறது. இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “எங்கள் வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்து கட்சியின் மத்திய தேர்தல் குழுதான் இறுதி முடிவு எடுக்கும். குழு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை,” என்றார். கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறுகையில், வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் முடிவெடுக்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து கூற உரிமை உண்டு. வயநாட்டில் ராகுல் காந்தியை மீண்டும் களமிறக்குமாறு நாங்கள் ஏற்கனவே காங்கிரஸ் மேலிடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.