பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டம்: ஆட்டோ, பஸ்கள் ஓடாது; பள்ளி, கல்லூரிகள் இயங்காது!!
சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மைசூரு, மண்டியா உள்பட 5 மாவடங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மண்டியா மாவட்டத்தில் மட்டும் 22 நாட்களுக்கும் மேல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மண்டியா மற்றும் மத்தூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளதை கண்டித்து சில கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகள் பெங்களூருவில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி நாளை 26-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தலைநகர் பெங்களூருவில் முழு அடைப்பு நடைபெற உள்ளது. இந்த போராட்டத்துக்கு பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
போராட்டத்தையொட்டி பெங்களூருவில் நாளை ஆட்டோக்கள், லாரிகள், அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படாது. மேலும் ஐ.டி. நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பல்வேறு துறைகள், தொழில் அமைப்புகள், கடைகள் செயல்படாது. அதுபோல் பெங்களூருவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளும் நாளை இயங்காது. வழக்கம்போல் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்து கடைகள் மற்றும் அவசர சேவைகள், அரசு அலுவலகங்கள் மட்டுமே செயல்படும். தமிழக அரசு பஸ்கள் தமிழக-கர்நாடகா எல்லையான ஓசூர் சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது.
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பெங்களூருவில் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது, மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது, சட்டவிரோத செயல்கள் நடைபெறக்கூடாது என்பதற்காக பெங்களூருவில் போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயுதப்படை போலீசார் தயார் நிலையில் உள்ளனர். எங்கெங்கு தேவைப்படுகிறதோ அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கிடையே கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் வருகிற 29-ந் தேதி கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று பெங்களூருவில் நடக்கிறது.
இதில் கூட்டமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், எங்களை பொறுத்தவரையில் கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடைபெற வேண்டும். அதன்படி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந் தேதி கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் முழு அடைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.