போலீஸ் விசாரணை முடிந்தது: சந்திரபாபு நாயுடுவுக்கு காவல் நீட்டிப்பு!!
ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவரை சி.ஐ.டி போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரின் காவல் நிறைவடைந்த பின்னர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். சி.ஐ.டி அதிகாரிகளின் மனுதாக்கலின்படி அவரை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
அதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக ராஜமுந்திரி சிறையில் வைத்து சி.ஐ.டி அதிகாரிகள் கிடுக்கிப்படி விசாரணை மேற்கொண்டனர். காலை 9.30 மணிக்கு ஆரம்பித்த விசாரணை மாலை 5 மணிக்கு மேல் நீடித்தது. ஊழல் தொடர்பான கேள்விகளுடன் அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவிடம் துருவி துருவி விசாரித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
ஒருமணி நேர உணவு இடைவேளையின்போது தனது 2 வக்கீல்களுடன் காரசார விவாதத்தில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டதாக தெரிகிறது. விசாரணை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் வீடியோ கால் அழைப்பு மூலம் விஜயவாடா நீதிபதி முன்பு சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். இந்தநிலையில் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடுக்கு அக்டோபர் 5-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து விஜயவாடா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அவரை ராஜமுந்திரி சிறையில் வைத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர்.