;
Athirady Tamil News

சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமா?.. இங்கு செல்லுங்கள்!!

0

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள்.

வளங்களை குவித்து முன்னேற துடிப்பதால், பல்வேறு காரணங்களால் மனிதர்கள் இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். இதனால் சுத்தமான காற்றை சுவாசிப்பது அரிதாகி வருகிறது. தூய்மையான காற்றுள்ள இடங்களை தேடி அலையும் மனிதர்களுக்கு உலகில் சில இடங்களே மிஞ்சியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த தீவு மாநிலம், டஸ்மேனியா. இம்மாநிலத்தின் வடமேற்கு முனையில் உள்ள தீபகற்ப பகுதி, கேப் க்ரிம். இது “உலகின் முனை” (Edge of World) எனவும் அழைக்கப்படுகிறது. அன்டார்டிகாவிலிருந்து எவ்விதத்திலும் அசுத்தமாகாத வேகமான காற்று, மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இங்கு வந்து சேருகிறது. உலகின் பிற பகுதிகளிலிருந்து தொலைதூரம் இருப்பதாலும், சுற்றுலா பயணிகள் அறவே செல்லாத இடமென்பதாலும், பனிமலைகள் நிறைந்த தெற்கு கடற்பகுதியின் மீது பயணித்து வரும் காற்று இங்கு வந்தடைவதாலும், இங்குள்ள காற்று உலகிலேயே தூய்மையானது என காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர். ஆன் ஸ்டேவர்ட் தெரிவித்துள்ளார்.

இதே போன்று உலகெங்கிலும் உள்ள பிற சுத்தமான காற்று உள்ள தளங்கள், அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள தீவு மாநிலமான ஹவாயில் உள்ள மௌனா லோவா, பசிபிக் கடற்பகுதியின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்குவாரி தீவு, அண்டார்டிகாவில் உள்ள கேசி நிலையம் மற்றும் நார்வே நாட்டின் ஸ்வால்பார்ட் பகுதியில் ஸ்பிட்ஸ்பர்கன் தீவில் உள்ள நை-அலெசுண்ட் ஆகியவையாகும். சுத்தமான காற்று உடலாரோக்கியத்திற்கு அவசியமானது என்பதால் இத்தீவிலிருந்து கொள்முதல் செய்த காற்று என் விளம்பரம் செய்து “டஸ்மேனிய காற்று” என பெயரிட்டு பாட்டில்களில் இக்காற்றினை அடைத்து வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.