;
Athirady Tamil News

உலகிலேயே மிக பெரிய இந்து கோயில் அமெரிக்காவில் அடுத்த மாதம் திறப்பு!!

0

இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா (BAPS) எனும் இந்து மத அமைப்பினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெரிய இந்து கோயில், வரும் அக்டோபர் 8ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. பிறகு 10 நாட்களுக்கு பிறகு பொது மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே இந்த அமைப்பினால் 100 ஏக்கரில் உருவாக்கப்பட்ட கோவில் இந்திய தலைநகர் புது டெல்லியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அட்லாண்டிக் கடற்பகுதியிலிருந்து சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் அமெரிக்காவில் உள்ள வடகிழக்கு மாநிலம் நியூ ஜெர்சி. இத்திருக்கோவில் இம்மாநிலத்தின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்திலிருந்து தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளது.

சுமார் 183 ஏக்கர் நிலபரப்பில் கட்டப்பட்டுள்ள இத்திருக்கோவிலை கட்டி முடிக்க சுமார் 12 ஆண்டு காலம் ஆனது. இதன் கட்டுமான பணியில் அமெரிக்கா முழுவதிலுமிருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். உலக பாரம்பரிய தளமாக ஐ.நா. கூட்டமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட தென்மேற்கு ஆசியாவில் உள்ள கம்போடியா நாட்டின் அங்கோர் வாட் திருக்கோவில், 500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது.

நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லே டவுன்ஷிப் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த அக்ஷர்தாம் திருக்கோவில், அங்கோர் வாட் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது உலகிலேயே மிக பெரிய இந்து கோவிலாகும். அமெரிக்காவில் உள்ள சுவாமிநாரயன் அக்ஷர்தாம் கோவில், பண்டைய இந்திய கலாச்சார முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள், இந்திய இசைக்கருவிகள் மற்றும் நடன வடிவங்களின் செதுக்கல்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தில் மூலவர் எனப்படும் முக்கிய தெய்வத்தின் விக்கிரகத்தை தவிர, இத்திருக்கோவிலில் 12 விக்கிரகங்கள் உள்ளன. இக்கோவிலில் 9 சுழல் வடிவ கோபுரங்கள் மற்றும் 9 பிரமிடு வடிவ கோபுரங்கள் உள்ளன. இது பாரம்பரிய கட்டிடக்கலைகளின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடத்தையும் (elliptical dome) கொண்டுள்ளது.

சுண்ணாம்பு, கிரானைட், இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் பளிங்கு உள்ளிட்ட கிட்டத்தட்ட 20 லட்சம் (2 மில்லியன்) கன அடி கற்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இந்தியா, துருக்கி, கிரீஸ், இத்தாலி மற்றும் சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவை வரவழைக்கப்பட்டன. இக்கோவிலில், ‘பிரம்ம குண்ட்’ என அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய இந்திய படிக்கிணறு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட புனித நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. அக்டோபர் 18 முதல் பொதுமக்களின் தரிசனத்திற்காக இத்திருக்கோயில் திறக்கப்படும். அக்ஷர்தாம் என்றால் இறைவனின் புனிதமான இருப்பிடம் என பொருள்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.