அருங்காட்சியகம் அமைக்க ஜனாதிபதி திட்டம் !
சீதாவக்க இராசதானியினால் நம் நாட்டின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது என்றும் அடுத்த தலைமுறைக்கு அது தொடர்பான அறிவை வழங்கும் வகையில் சீதாவக்க பகுதியில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
12 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் “சீதாவக்க – சிசு அருணலு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் என்பன சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும். பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் விநியோகிப்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மாணவர்கள் சிலருக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, “சுமார் பன்னிரண்டாயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இன்று பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகின்றன. பிரதமரின் சீன விஜயத்தின் விளைவே இந்த உதவி கிடைத்துள்ளது. ஹங்வெல்ல ,அவிசாவளை என்பது மேல் மாகாணத்தில் மேம்பட்ட கல்வி முறையைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். அதற்காகப் பெரிய அர்ப்பணிப்பை பிரதமர் செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக பெருமளவு நிதியை ஒதுக்க முடியவில்லை. ஆனால், அரசாங்கமென்ற வகையில், அடுத்த ஆண்டு முதல் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ளோம்.
க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பற்றிப் பேசும் போது பாடசாலைக் கல்வி முறையும் டியுசன் கல்வி முறையும் செயற்படுகின்றன. கல்விக்காக அரசாங்கம் செலவழிக்கும் பணத்தைப் போலவே, பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக செலவிடுகின்றனர். இதனைக் கண்டறிந்து புதிய கல்வி முறையைத் தயாரிக்க எதிர்பார்க்கிறோம். கல்வியியலாளர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துகளைப் பெறவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குழந்தைகளுக்கு தேவையான தொழில்சார் கல்வியை வழங்க தேவையான சூழலை உருவாக்க வேண்டும். தொழிற்கல்வியை மறுசீரமைத்து இலங்கையை தொழிற்பயிற்சி கேந்திர நிலையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதன் மூலம் இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான தொழில்சார் அறிவைக் கொண்ட ஒரு பிரஜையை உருவாக்கும் திறன் எமக்குக் கிடைக்கும். ஆவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டின் எதிர்கால சந்ததியினரை நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் உருவாக்குகின்றன.
சீதாவக்க இராசதானியினால் நம் நாட்டின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது. அடுத்த தலைமுறைக்கு அது தொடர்பான அறிவை வழங்கும் வகையில் சீதாவக்க பகுதியில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளேன்.
இன்னும் சில வருடங்களில் இது ஒரு நகரமாக மாறிவிடும். கோட்டை நகருக்கு நடந்தது சீத்தாவக்கவுக்கும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, அதற்கு முன்னர் இந்தப் பணியை ஆரம்பிக்க வேண்டும்.
எதிர்காலத்தை உருவாக்கும்போது, கடந்த காலத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அனைத்து சீதாவக்க பாடசாலைகளின் பிள்ளைகளையும் சீதாவக்க இராசதானி மற்றும் சீத்தாவகவின் வரலாறு பற்றிய விடயங்களை எழுதி எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவற்றில் சிறந்த படைப்பை சமர்ப்பிக்கும் பாடசாலைக்கு பரிசு வழங்கவும் நான் எதிர்பார்க்கின்றேன்” என்றார்.