நிபா வைரஸ் பரவல் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!
அயல் நாடான இந்தியாவில் பரவிய நிபா வைரஸ் தொடர்பில் இலங்கை குறைந்த ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக இலங்கையின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் இதுவரை 06 பேருக்கு மாத்திரமே நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் வெளிப்பட்டது. இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 700 க்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அவர்களில், செப்டம்பர் 22 ஆம் திகதி வரை தொற்று உறுதியாகவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் பரவுவதைத் தடுக்க , மாநில அதிகாரிகள் நோயின் பிறப்பிடமான பகுதியில் பொது இடங்களை முடக்கினர்.
கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவைத் தாக்கும் நான்காவது நிபா வைரஸ் தொற்றாகும். ஒவ்வொரு முறையும், நோய் நன்கு கட்டுப்படுத்தப்பட்டு, சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பிறப்பிடத்திற்கு அப்பால் பரவாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
நிபா வைரஸ் (NiV) என்பது வெளவால்கள் மற்றும் உணவு மூலம் பரவுகிறது.
இது நேரடியாக மனிதனிடமிருந்து மனிதனுக்கு நீண்ட நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது. இது அறிகுறியற்ற தொற்று என்பதோடு கடுமையான சுவாச நோய் மற்றும் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும்.
இந்த தொற்றுக்கு தற்போது குறிப்பிட்ட மருந்துகளோ தடுப்பூசிகளோ இல்லை. கடுமையான சுவாசம் மற்றும் நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மேற்கொள்ளப்படும் சிகிச்சையே இதற்கும் மேற்கொள்ளப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.