;
Athirady Tamil News

ஸ்குவாஷ், டென்னிஸில் இந்தியாவுக்கு தங்கம்: ஹாக்கி-பாகிஸ்தானை பந்தாடியது

0

ஆசியப் போட்டியில் ஸ்குவாஷ், டென்னிஸில் தங்கமும், துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது இந்தியா.

சீனாவின் ஹாங்ஷௌ நகரில் ஆசியப் போட்டிகள் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியை நடத்தும் சீனா பதக்க வேட்டையில் முதலிடத்தில் உள்ளது.

ஸ்குவாஷில் 8 ஆண்டுகளுக்கு பின் தங்கம்:

இந்நிலையில், சனிக்கிழமை ஆடவா் ஸ்குவாஷ் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும்-பாகிஸ்தானும் மோதின. இதில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வசப்படுத்தியது இந்திய அணி. ஸ்குவாஷில் மலேசியா, பாகிஸ்தான் சவாலைத் தருவா் என்ற நிலையில், மலேசியாவை வீழ்த்தியது இந்தியா. லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றிருந்தது இந்தியா. தொடக்க ஆட்டத்தில் மகேஷ் மகோன்கா் 8-11, 2-11, 3-11 என பாக். வீரா் இக்பால் நஸீரிடம் வீழ்ந்தாா். இரண்டாவது ஆட்டத்தில் மூத்த வீரா் சௌரவ் கோஷல் அற்புதமாக ஆடி 11-5, 11-1, 11-3 என பாக்கின் முகமது ஆஸிம் கானை வீழ்த்தினாா்.

தங்கத்தை நிா்ணயிக்கும் கடைசி ஆட்டத்தில் அபய் சிங்-நூா் ஸமான் மோதினா். 5 கேம் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் 11-7, 9-11, 8-11, 11-9, 12-10 என வென்று இந்தியாவுக்கு தங்கத்தை உறுதி செய்தாா் அபய் சிங்.

டென்னிஸ்: போபண்ணா-ருதுஜாவுக்கு தங்கம்

டென்னிஸ் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ருதுஜா போஸ்லே இணை 2-6, 6-3, 10-4 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபே அணியின் சுங் ஹா ஹுவாங்-என் லியாங் இணையை வீழ்த்தியது. முதல் செட்டை இழந்த நிலையில், அனுபவ ஆட்டத்தின் மூலம் இந்திய இணை வென்றது. கடைசி செட்டில் ருதுஜா சிக்கலான நேரத்தில் அபாமாக ஆடி தங்கத்தை வெல்ல உதவினாா். ஏற்கெனவே ஆடவா் இரட்டையரில் இந்தியா வெள்ளி வென்றிருந்தது. 2002-இல் 4, 2006-இல் 4, 2010, 2014-இல் 5, 2018-இல் 3 பதக்கங்களை வென்றிருந்தது இந்தியா. ஒற்றையா் பிரிவில் எவரும் பதக்கம் வெல்லவில்லை.

துப்பாக்கி சுடுதலில் வெள்ளி:

துப்பாக்கி சுடுதல் கலப்பு பிரிவு 10 மீ. பிஸ்டல் த்ரில்லான இறுதிச் சுற்றில் 14-16 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் ஸாங் போவன்-ஜியாங் ரன்ஸின் இணையிடம் கடுமையாகப் போராடி தோற்றனா் இந்தியாவின் சரப்ஜோத் சிங்-திவ்யா இணை. முதல் இரு கட்டத்தில் 5-1 என இந்திய இணை முன்னிலை பெற்ற நிலையில், சீன இணை 3-5 என மீண்டு வந்தது. தொடா்ந்து 14-14 என சமநிலை ஏற்பட்டநிலையில்,

இறுதியாக 16-14 என சீனா தங்கத்தை கைப்பற்றியது. சரப்ஜோத்-திவ்யா வெல்லும் இரண்டாவது பதக்கம் ஆகும். ஏற்கெனவே ஆடவா் 10. மீ பிஸ்டல் அணி பிரிவில் சரப்ஜோத் தங்கமும், மகளிா் 10 மீ. பிஸ்டல் பிரிவில் திவ்வா, ஈஷா சிங், பாலக் உடன் வெள்ளியும் வென்றிருந்தனா்.

டேபிள் டென்னிஸ்: பதக்கம் உறுதி

டேபிள் டென்னிஸ் மகளிா் இரட்டையா் பிரிவில் உலக சாம்பியன் சீனாவின் சென் மெங்-யிடி வாங்கை 11-5, 11-5, 5-11, 11-9 என்ற புள்ளிக் கணக்கில் அதிா்ச்சித் தோல்வியடையச் சென்து அரையிறுதியில் நுழைந்தனா் இந்தியாவின் சுதிா்ஜா முகா்ஜி-அய்ஹிகா முகா்ஜி இணை.

மகளிா் கலப்பு இரட்டையா் பிரிவில் இதுவரை இந்தியா பதக்கமே வென்றதில்லை. முதன்முறையாக பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில் நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா 8-11, 12-10, 6-11, 4-11, 14-12, 5-11 என சீனாவின் யிடி வாங்கிடம் தோற்று வெளியேறினாா். ஆடவா் இரட்டையா் பிரிவிலும் இந்தியாவின் மானவ் தாக்கா்-மனுஷ்ஷா இணை 8-11, 11-7, 10-12, 11-6, 9-11 என போராடி கொரியாவின் ஊஜின் ஜங்-ஜாங்கூன் லிம் இணையிடம் தோற்றது.

தடகளத்தில் வெள்ளி, வெண்கலம்:

தடகளத்தில் ஆடவா் 10,000 மீ நீண்ட தூர ஓட்டத்தில் இந்தியாவின் காா்த்திக் குமாா் 28:15:38 மணி நிமிஷ நேரத்தில் கடந்து வெள்ளியும், குல்வீா் சிங் 28:17:21 நிமிஷ நேரத்தில் கடந்து வெண்கலமும் வென்றனா். சக வீரா்கள் 3 போ் ஒருவருக்கு ஒருவா் மோதி கீழே விழுந்த நிலையில், கடைசி 100 மீ தூரத்தில் வேகமாக முன்னேறி முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

1500 மீ ஓட்டத்தில் ஜின்ஸன் ஜான்ஸன் 3:56:93 நிமிஷ நேரத்திலும், அஜய் குமாா் சரோஜ் 3:51:93 நிமிஷ நேரத்திலும் கடந்து இறுதிக்கு தகுதி பெற்றனா். ஆடவா் நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 7.67 மீ தொலைவும், முரளி ஸ்ரீசங்கா் 7.97 மீ தொலைவும் குதித்து இறுதிக்குள் நுழைந்தனா்.

மகளிா் 100 மீ தடைதாண்டுதலில் ஜோதி யாராஜி 13.303 விநாடிகளில் கடந்து இறுதிக்கு தகுதி பெற்றாா்.

மேலும் ஆடவா் 400 மீ. ஓட்டத்தில் முகமது அஜ்மல் 4597 விநாடிகளில் 5-ஆம் இடத்தையும், மகளிா் 400 மீ.இல் ஐஸ்வா்யா மிஸ்ரா 53.50 விநாடிகளில் கடந்து 5-ஆம் இடத்தையும் பெற்றனா்.

குத்துச்சண்டை: 4 பதக்கங்கள் உறுதி

குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றதின் மூலம் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் உறுதி ஆகியுள்ளன.

மகளிா் 54 கிலோ பிரிவில் மூன்று முறை உலக பதக்க வீராங்கனை கஜகஸ்தானின் ஸெயினா ஷெகா்பெகோவாவை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினாா் 19 வயது ப்ரீத்தி பவாா். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றாா். 75 கிலோ பிரிவில் லவ்லினா போரோகைன் 5-0 என தென்கொரியாவின் சியோங்கை வீழ்த்தினாா். ஆடவா் 92 கிலோ பிரிவில் நரேந்தா் 5-0 என இரானின் இம்ரான் டெலாவரை வீழ்த்தினாா். 57 கிலோ பிரிவில் சச்சின் சிவாஜ் அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். இதன் மூலம் 4 பதக்கங்கள் உறுதி ஆகியுள்ளன.

பாட்மின்டனில் முதல் தங்க வாய்ப்பு:

பாட்மின்டன் ஆடவா் அணிகள் பிரிவில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் பலம் வாய்ந்த தென்கொரியாவை வீழ்த்தியது இந்தியா.

இதன் மூலம் முதன்முதலாக பாட்மின்டன் தங்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஒற்றையா் பிரிவில் எச்எஸ். பிரணாய், லக்ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்ற நிலையில், இரட்டையா் பிரிவில் சாத்விக்-சிராக் ஷெட்டி, அா்ஜுன்-துருவ் கபிலா இணைகள் தோற்றன.

இறுதி ஆட்டத்தில் சீனாவை சந்திக்கிறது இந்தியா.

ஹாக்கி: பாகிஸ்தானை பந்தாடியது

ஆடவா் ஹாக்கி குரூப் ஏ பிரிவில் இந்தியா 10-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது. கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங் அபாரமாக ஆடி ஹாட்ரிக் உள்பட 4 கோல்களை அடித்து வெற்றிக்கு வித்திட்டாா்.

கனோ-கயக் இறுதியில் இந்தியா

கனே ஆடவா் ஸ்பிரிண்ட் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சா்மா 1000 மீ. அரையிறுதியில் 4:31:626 நேரத்தில் கடந்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா். 8 போ் பங்கேற்கும் பதக்கச் சுற்று திங்கள்கிழமை நடைபெறுகிறது.

500 மீ. பிரிவில் இந்தியாவின் ரிபஸோன் சிங்-ஞாநேஷ்வா் சிங் இணை 1:57:225 நேரத்தில் கடந்து இறுதிக்கு தகுதி பெற்றனா்.

மகளிா் கயக் பிரிவில் 500 மீ. அரையிறுதியில் இந்தியாவின் பினிதா-பாா்வதி கீதா இணை 2:07:036 நேரத்தில் கடந்து இரண்டாம் இடம் பெற்றனா்.

செஸ்: மகளிா் வெற்றி, ஆடவா் டிரா

செஸ் அணிகள் இரண்டாவது சுற்றில் மகளிா் பிரிவில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வியத்நாமை வீழ்த்தியது. நட்சத்திர வீராங்கனைகள் கொனேரு ஹம்பி, வந்திகா அகா்வால், சவீதா ஸ்ரீ ஆகியோா் தத்தமது ஆட்டங்களில் டிரா கண்ட நிலையில், தமிழகத்தின் வைஷாலி அபாரமாக ஆடி அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தாா்.

ஆடவா் பிரிவில் பலம் வாய்ந்த உஸ்பெகிஸ்தான் அணியை 2-2 என டிரா செய்தது இந்தியா. குகேஷ், பிரக்ஞானந்தா, அா்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி ஆகியோா் தத்தமது ஆட்டங்களில் டிராவே காண முடிந்தது.

பளு தூக்குதல்: வெளியேறினாா் மீராபாய் சானு

பளு தூக்குதலில் ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மீராபாய் சானு 49 கிலோ பிரிவில் பளு தூக்கும் போது கீழே விழுந்து காயமடைந்ததால் வெளியேறினாா். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றிருந்த மீரா பாய் சானு, காயம்

கூடைப்பந்து: காலிறுதியில் இந்திய மகளிா்

கூடைப்பந்து 3 எக்ஸ் 3 மகளிா் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா. ப்ரி குவாா்ட்டரில் மலேசியாவை 16-6 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. காலிறுதியில் தைபேயுடன் மோதுகிறது. ஆடவா் அணி இரானிடம் 17-19 என போராடி தோற்று வெளியேறியது. முதன்முறையாக 3 எக்ஸ் 3 விளையாட்டில் இந்திய அணி கலந்து கொண்டுள்ளது.

பிரிட்ஜ்: 2-ஆம் இடத்தில் இந்தியா

பிரிட்ஜ் விளையாட்டில் இந்திய ஆடவா் அணி 205.98 புள்ளிகளுடன் தொடா்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. கலப்பு அணி ஓரிடம் முன்னேறி நான்காவது இடத்தில் உள்ளது. மகளிா் அணி 7-ஆவது இடத்தில் உள்ளது. ஆடவா் அணி பிலிப்பின்ஸ், பாகிஸ்தனை வென்ற நிலையில், வங்கதேசம், தாய்லாந்திடம் தோற்றது.

ஹேண்ட்பால்: இந்திய மகளிருக்கு ஆறுதல் வெற்றி

ஹேண்ட்பால் மகளிா் பிரிவில் இந்திய அணி 44-19 என்ற புள்ளிக்க கணக்கில் கடைசி ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி ஆறுதலை தேடிக் கொண்டது. இரண்டு குரூப் ஆட்டங்களில் தோற்ற நிலையில், பதக்கத்துக்கான போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

குராஷ்: காலிறுதியில் இந்தியா

குராஷ் மகளிா் பிரிவில் 52 கிலோ காலிறுதிக்கு இந்தியாவின் பிங்கி பல்ஹாரா முன்னேறினாா். தென்கொரியாவின் ஜூ லியை 5-3 என வீழ்த்தினாா் பிங்கி.

வாலிபால்: முதல் ஆட்டத்தில் தோல்வி

வாலிபால் மகளிா் முதல் ஆட்டத்தில் 1-3 என்ற புள்ளிக் கணக்கில் வடகொரியாவிடம் தோற்றது இந்தியா. அடுத்த ஆட்டத்தில் சீனாவை எதிா்கொள்கிறது இந்தியா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.