கட்சி விதிகள் கூட தெரியாத சீமானுக்கு என்னை நீக்க அதிகாரமில்லை – வெடித்த உட்கட்சி பூசல்..!
மாநில ஒருங்கிணைப்பாளரான தன்னை நீக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிகாரமில்லை என வெற்றிகுமாரன் என்பவர் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி
தமிழகத்தில் தற்போது மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் கட்சி என்றால் அது திராவிட கட்சிகளை தாண்டி நாம் தமிழர் கட்சி தான். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி கட்சியை மக்களிடம் எடுத்து சென்று கொண்டே இருக்கின்றார்.
அவருக்கு உறுதுணையாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொடர்ந்து அயராது பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சிக்குள் சீமானுக்கு எதிராக உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.
மதுரை மேற்கு தொகுதியை சேர்ந்த செ.வெற்றிக்குமரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதை அடுத்து ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்த வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார் என்று சீமான் அறிவித்திருந்தார்.
இதற்கு செ.வெற்றிக்குமரன் பதிலளித்துள்ளார். எல்லாம் தெரிந்த உங்களுக்கு நமது கட்சியின் விதிகள் தெரியாதது கவலை அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி விதிமுறைகளின் படி என்னை நீக்குவதற்கு உங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதையும், மாநில பொறுப்பில் இருக்கும் என்னை பொதுக்குழுவை கூட்டித்தான் நீக்க முடியும் என்பதையும் பணிவோடு தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.