கூகுள் மேப்பை நம்பி காரை ஆற்றில் விட்ட டிரைவர்.. 2 டாக்டர்கள் பலி – 3 பேர் படுகாயம்!
வழிதெரியாமல் கூகுள் மேப்பை பார்த்து விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் மேப்
கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் அத்வைது, டாக்டர் அஜ்மல் மற்றும் அவர்களது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து கொச்சியில் உள்ள நண்பரின் இல்ல விழாவில் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் அன்று இரவே காரில் இவர்கள் 5 பெரும் எர்ணாகுளத்திற்கு திரும்பினர். அப்பொழுது இவர்கள் செல்லும் வழியில் குழப்பம் ஏற்பட்டது.
எர்ணாகுளம் பகுதியில் பலத்த கனமழை காரணமாக சாலை சரியாக தெரியாத நிலையில் கூகுள் மேப்பை பார்த்து பயணித்தனர். அங்கு மழை காரணமாக எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நின்றது, பின்னர் சாலைகளும் சரியாக தெரியவில்லை.
அதனால் கொச்சி அருகே உள்ள கொடூங்காடு என்ற பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது வழி தெரியாமல் அந்தப் பகுதியில் உள்ள ஆற்றில் கார் கவிழ்ந்தது.
இந்நிலையில், அங்கு நீர் அதிகமாக இருந்ததால் கார் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்புத் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர் காரில் பின்பகுதியில் இருந்த மூன்று பேரை கார் கதவு திறந்து இருந்ததால் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
முன்பகுதியில் கார் கதவு முழுமையாக மூடி இருந்ததால் முன் வரிசையில் அமர்ந்து இருந்த டாக்டர் அத்வைது மற்றும் டாக்டர் அஜ்மல் ஆகிய இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.