ஈராக்கில் புகுந்து வான்வழித் தாக்குதல் நடத்திய துருக்கி: அங்காராவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி
துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக வடக்கு ஈராக்கில் துருக்கி வான் தாக்குதலை நடத்தி இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் மீது பயங்கரவாத தாக்குதல்
துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள நாடாளுமன்றத்தின் முன்பு ஞாயிற்றுக்கிழமை முற்பகுதியில் திடீரென பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 மாத இடைவெளிக்கு பிறகு நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு இரண்டு பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுத்தனர். அங்காராவில் நடந்த இந்த தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவரில் ஒருவர் குண்டுவெடிப்பில் இறந்துவிட்டதாகவும், மற்றொருவர் பொலிஸாருடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் துருக்கி உள்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
ஈராக்கில் புகுந்து தாக்குதல்
இந்நிலையில் தலைநகர் அங்காரா மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடக்கு ஈராக் மீது துருக்கி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இது தொடர்பாக X தளத்தில் துருக்கி அரசின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு ஈராக்கில் உள்ள மெட்டினா, ஹகுர்க், காண்டில் மற்றும் காரா ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து மற்றும் பிரிவினைவாதிகளின் பகுதிகள் மீது இரவு 9 மணியளவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பதுங்கு குழிகள், கிடங்குகள், குகைகள் ஆகிய மொத்தம் 20 இலக்குகள் குறிவைத்து அழிக்கப்பட்டது.
இந்த வான்வழித் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.