கச்சா எண்ணெய் வளம் : உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் குவைத்
ஒவ்வொரு நாளும் எரிபொருட்கள் இன்றி சில வேலைகளை செய்யவே முடியாது. எனவே உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றன.
வளைகுடா நாடுகள் என்றாலே எண்ணெய் வளம் தான் முதலில் நினைவுக்கு வரும். இதனால் வளைகுடா நாடுகளுக்கு கோடியாய் கோடியாய் பணம் கொட்டி கொண்டிருக்கிறது.
அதில் முக்கியமான நாடாக திகழ்வது குவைத். இந்நாட்டு அரசு குவைத் எண்ணெய் நிறுவனம் (KOC – Kuwait Oil Company) என்ற பெயரில் கச்சா எண்ணெய் எடுத்து விற்பனை செய்யும் வேலையை செய்து வருகிறது.
மூன்று விதமான கச்சா எண்ணெய்கள்
குவைத் நாட்டை பொறுத்தவரையில் குவைதி எக்ஸ்போர்டு க்ரூடு, லைட் க்ரூடு, ஹெவி க்ரூடு என மூன்று விதமான கச்சா எண்ணெய்கள் கிடைக்கின்றன.
இவற்றின் தரத்திற்கு ஏற்ப வெவ்வேறு விலை வைத்து சர்வதேச சந்தையில் விற்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக பூமியில் இருந்து கச்சா எண்ணெய் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே எதிர்காலத்தில் தீர்ந்து விடும் அபாயம் இருக்கிறது. எனவே தான் பல்வேறு எண்ணெய் கிணறுகளை தோண்டி குவைத் அரசு கச்சா எண்ணெயை சமநிலை செய்து வருகிறது.
நிலத்தில் மட்டுமே ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு வந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு முதல்முறையாக கடலில் தோண்ட குவைத் அரசு முடிவு செய்தது.
ஆழமான துளைகள் போட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் தொடங்கின. தற்போது வரை சீரான முறையில் எண்ணெய் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் குவைத் எண்ணெய் நிறுவனம் (KOC) புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடலில் தோண்டப்பட்ட கிணற்றில் இருந்து இன்னும் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே எண்ணெய் கிடைக்கும். அதன்பிறகு எண்ணெய் தீர்ந்துவிடும் என்று தெரிவித்துள்ளது.
அப்படி பார்த்தால் 2026ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிடும்.
குவைத் அரசின் புதிய முயற்சிகள்
அதன்பிறகு வேறொரு பகுதியை நாடி செல்ல வேண்டும். இதற்கிடையில் எண்ணெய் வளத்தை மேம்படுத்த குவைத் அரசு சிறப்பு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏனெனில் கச்சா எண்ணெய்யை நம்பி பல்வேறு உலக நாடுகள் இருக்கின்றன.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத மாற்று சக்தியை நோக்கி ஓடினாலும் உலகின் தேவையை மொத்தமாக பூர்த்தி செய்ய முடியாது. எனவே கச்சா எண்ணெய் கிடைக்கும் வரை அதன் பயன்பாடும் இருக்கும்.
இந்த சூழலில் வரும் 2030ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 3.5 மில்லியன் பீ்ாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அளவிற்கு திட்டங்களை அமல்படுத்த குவைத் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக 1.7 பில்லியன் குவைத் தினார்கள் நிதி ஒதுக்கியுள்ளது. கிட்டதட்ட 4.65 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
அதுமட்டுமின்றி 6 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புதிதாக 6 எண்ணெய் கிணறுகளை கடலில் தோண்ட திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.