கனடாவின் குருதி தோய்ந்த பக்கம் : குடிவரவு அமைச்சர் வெளியிட்ட பின்னணி
கனடா மிகவும் இருண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
இந்த ரத்த வரலாறு பலருக்கும் அதிர்ச்சி கொடுப்பதாக அமையும் எனவும், இது குறித்த ஆவணங்களை பொதுவெளியில் வெளியிடுவது குறித்தும் ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இப்போது கடும் மோதல் போக்கே நிலவி வருகிறது. கனடா காலிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது என்பதே இப்போது அனைவரும் முன்வைக்கும் புகாராக இருக்கிறது.
காலிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறும் முன்பு, கனடா நாஜி போர்க் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது.
கடந்த செப். 25ஆம் திகதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அங்கு சென்ற போது, அப்படி அடைக்கலாம் தரப்பட்ட ஒரு நாஜி வீரருக்குத் தான் ஒட்டுமொத்த கனடா நாடாளுமன்றமும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தது.
உலகெங்கும் கடுமையான எதிர்ப்பு
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் படைப் பிரிவுகளில் ஒன்றில் பணியாற்றிய போலந்து நாட்டில் பிறந்த உக்ரைனியரான யாரோஸ்லாவ் ஹன்கா என்பவர் தான் இவ்வாறு கௌரவிக்கப்பட்டார். இதற்கு உலகெங்கும் இருந்தும் மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கனடா சபாநாயகர் தனது பதவியையே துறக்கும் அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
அதேபோல கனடா பிரதமரும் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார். ஏற்கனவே காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்குக் கனடா புகலிடம் தருவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், இந்தச் சம்பவம் ட்ரூடோ அரசுக்கு பெரும் தர்ம சங்கடமாக அமைந்தது.
கனடா பேச்சு சுதந்திரத்தை முழுமையாக ஆதரிக்கும் ஒரு நாடாக இருக்கிறது. ஆனால், இதே கனடா காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு மட்டுமில்லை. நாஜி படையினருக்கும் ஆதரவாக இருந்துள்ளனர்.
நாஜி போர் குற்றவாளிகள்
நாஜிக்களுடன் கனடா மிகவும் இருண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் என்பவரே வெளிப்படையாகக் கூறுகிறார்.
மேலும், கனடா நாட்டில் நாஜி போர்க் குற்றவாளிகள் இருப்பது குறித்த ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிடுவது குறித்தும் ஆலோசித்து வருவதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கனடா மட்டுமில்லை… இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் பல லட்சம் யூதர்களின் மரணத்திற்குக் காரணமான நாஜி போர்க் குற்றவாளிகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
குறிப்பிட்ட சில நாடுகள் நாஜிக்கள் அடைக்கலம் புகுவதை எளிதாகவும் மாற்றினார்கள். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இப்படி அதிகப்படியான நாஜி வீரர்கள் தஞ்சம் புகுந்தனர்.
நாஜி வீரர்களுக்கு ஆதரவு
நாஜி வீரர்களுக்கு இந்த அரசுகள் அடைக்கலாம் தர காரணமும் இருக்கவே செய்தது. அப்போது மற்ற நாடுகளைக் காட்டிலும் தொழில்நுட்ப ரீதியில் ஜெர்மனி முன்னேறியே இருந்தது. நாஜிக்களுக்கு அடைக்கலாம் கொடுத்து அந்த தொழில்நுட்ப அறிவை பெறுவதே இவர்கள் திட்டம்.
இதற்காக 1945இல் நாஜி பொறியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரை அமெரிக்கா பணிக்கு அமர்த்தியது. அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் உதவியுடன் பல ஆயிரம் நாஜிக்கள் அமெரிக்காவில் குடியேறியதாக நியூயார்க் டைம்ஸின் புலனாய்வுப் பத்திரிக்கையாளரான எரிக் லிச்ட்ப்லாவ் தெரிவிக்கிறார்.
“ஆபரேஷன் பேப்பர்கிளிப்” திட்டம் கீழ் நாஜி ஜெர்மனியைச் சேர்ந்த 88 விஞ்ஞானிகள் அமெரிக்காவில் பணியமர்த்தப்பட்டனர்.
அவர்களுக்குப் போர்க் குற்றத்தில் தொடர்பு இருந்தாலும் கூட சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான பன்ப்போரில் அவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
அமெரிக்காவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள், விண்வெளி குறித்த ஆய்வுகளில் இந்த நாஜி விஞ்ஞானிகளின் பங்கு மிகப் பெரியது.
அமெரிக்கா மட்டுமின்றி கனடாவும் கூட இப்படிப் பல ஆயிரம் நாஜி வீரர்களுக்கு ஆதரவு கொடுத்தது.
கனடா நாஜி வரலாறு
1933 முதல் 1948 வரையிலான காலத்தில் கனடாவில் 5,000க்கும் குறைவான யூத அகதிகளுக்கு மட்டுமே அடைக்கலம் தரப்பட்டது. இது வேறு எந்த நேச நாடுகள் அடைக்கலம் கொடுத்ததைக் காட்டிலும் குறைவாகும்.
குறிப்பாக 1939இஸ் 900 யூத அகதிகளுடன் வந்த கப்பலுக்கு அனுமதி தராமல் கனடா திருப்பி அனுப்பியது. அவர்களில் 254 பேர் பின்னர் நாஜி வதை முகாம்களில் கொல்லப்பட்டனர்.
அவர்களின் ரத்தம் நிச்சயம் கனடா கைகளிலேயே இருக்கிறது. இந்த விவகாரத்தில் தாங்கள் செய்தது தவறு என்று கடந்த 2018ஆம் ஆண்டில், ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க மன்னிப்பும் கேட்டிருந்தார்.
கனடாவில் ஒரு கட்டத்தில் யூதராக இருப்பதைக் காட்டிலும் நாஜியாக இருந்தால் எளிதாகக் கனடாவுக்குள் வரலாம் என்ற நிலை இருந்தது என்கிறார் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர்.
இந்த ஆவணங்கள் மட்டும் பொதுவெளிக்கு வந்தால் கனடா எந்தளவுக்கு நாஜிக்களுக்கு ஆதரவாக இருந்தனர் என்று தெரிய வரும்.
இந்தியா – கனடா இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கனடாவின் பின்னணியில் இருக்கும் மோசமான வரலாறு பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கும்