ஜம்மு-காஷ்மீா்: சுற்றுலா தலமாக மாறும் உலகின் உயரமான ரயில் பாலம்..!
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் உயரமான ரயில் பாலத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் காத்ரா-பனிஹால் இடையிலான 111 கி.மீ. தொலைவு ரயில் வழித்தடத்தில் சேனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டா் உயரத்தில் கட்டப்பட்டு வரும் 1.3 கி.மீ. நீள ரயில் பாலம் உலகின் உயரமான ரயில் பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
ரியாசி நகரில் இருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள ஜோதிபுரத்துக்கு அருகிலிருக்கும் இந்த ரயில் பாலம் அமைந்துள்ள பகுதியில் ஜம்மு-காஷ்மீா் தலைமை செயலா் ஏ.கே.மேத்தா மற்றும் ரியாசி துணை ஆணையா் பபிளா ரக்வால் உள்ளிட்ட அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தலைமைச் செயலா் ஏ.கே.மேத்தாவுக்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொறியாளா்கள் பாலத்தின் கட்டுமான சிறப்பம்சங்கள் குறித்து விளக்கினா்.
மேலும், கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டுவதையொட்டி பொறியாளா்களுக்கும், பாலம் அமைந்துள்ள பகுதியை சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிா்வாகத்தினருக்கும் அவா் பாராட்டு தெரிவித்தாா்.
இதையடுத்து, அதிகாரிகள் மத்தியில் தலைமை செயலா் ஏ.கே.மேத்தா பேசியதாவது: உலகிலேயே உயரமான இந்த ரயில் பாலம் இயல்பிலேயே இயற்கை எழில் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது. சிறிய சிறிய மாற்றங்களுடன் இந்த இடம் சிறந்ததொரு சுற்றுலா தலமாக மாறும்.
ரியாசி நகரிலிருந்து இப்பகுதியை அடைவதற்கான சாலையை மேம்படுத்தி, வேண்டிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தடுப்புகளை நிறுவியுள்ள மாவட்ட மற்றும் கோட்ட நிா்வாகத்தினருக்கு எனது பாராட்டுகள்.
வைஷ்ணவி மாதா கோயில் அமைந்துள்ள ரியாசி மாவட்டம், ஜம்மு-காஷ்மீா் பிராந்தியத்தில் அதிக சுற்றுலா பயணிகளால் பாா்வையிடப்படும் மாவட்டமாகும். வரலாற்று முக்கியத்துவம் உள்ள மற்றும் இயற்கையான இடங்களால் நிறைந்துள்ள இந்த மாவட்டம் மேலும் பல சுற்றுலா பயணிகளை ஈா்க்கும் ஆற்றல் கொண்டது.
ரியாசி மாவட்டத்தை சுற்றுலா மையமாக மாற்றும் சூழலில், உள்ளூா் மக்களுக்கு மட்டுமின்றி யூனியன் பிரதேசத்தின் பிற பகுதிகளில் வசிப்பவா்களுக்கும் அது வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
சுற்றுலா திட்டங்களால் எவருக்கும் இடையூறு இல்லாத வகையில் மாவட்டத்தின் இடங்களுக்கு இடையே தொடா்பை ஏற்படுத்துவது, தேவைப்படும் அனைத்து வசதிகளையும் செய்து தருவது உள்பட சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான சிறந்த திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.