இந்திய மாணவா்களுக்கு மலிவு விலையில் ‘க்ரோம்புக்’ மடிக்கணினி
ஹெச்பி நிறுவனத்துடன் இணைந்து கூகுள் ‘க்ரோம்புக்’ மடிக்கணினியை இந்தியாவில் தயாரிக்கப்போவதை அறிவித்த கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை, ‘இந்திய மாணவா்களுக்கு மலிவு மற்றும் பாதுகாப்பு கணினி அனுபவம் மேலும் எளிதில் கிடைக்கும்’ என்றாா்.
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ‘ஃப்ளெக்ஸ்’ தொழிற்சாலை வளாகத்தில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஹெச்பி நிறுவனத்தின் மடிக்கணினிகள், மேசைக் கணிப்பொறிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கூகுளின் பிரத்யேக இயங்குதளம் (ஓ.எஸ்.) கொண்ட இலகுரக மடிக்கணினியான ‘க்ரோம்புக்’ தயாரிப்பை இந்த தொழிற்சாலையில் மேற்கொள்ள ஹெச்பி நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்தியாவில் கூகுள் க்ரோம்புக் இலகுரக மடிக்கணினியைத் தயாரிப்பதற்கு ஹெச்பி நிறுவனத்துடன் இணைந்துள்ளோம். இந்தியாவில் முதல் முறையாக கூகுள் க்ரோம்புக் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம், இந்திய மாணவா்களுக்கு மலிவு மற்றும் பாதுகாப்பான கணினி அனுபவம் மேலும் எளிதாக கிடைக்கும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா். ஹெச்பி நிறுவன செய்திதொடா்பாளரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினாா்.
கூகுள் மற்றும் ஹெச்பியின் கூட்டு அறிக்கையில், ‘உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு உதவிப்புரிந்து முன்னணி சாதனமாக க்ரோம்புக் திகழ்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி இயங்குதளம் கொண்ட மற்ற நிறுவனங்களின் இலகுரக மடிக்கணினிகளுடன் (நோட்புக்) ஒப்பிடும்போது கூகுளின் க்ரோம்புக் குறைந்த விலையில் விற்பனையாகிறது. புதிய கூகுள் க்ரோம்புக் ஒன்று தற்போது ரூ.15,990 வரையிலான விலையில் கிடைக்கின்றது. இந்தியாவிலேயே க்ரோம்புக் தயாரிக்கப்படும் சூழலில், அதன்விலை மேலும் குறையும் எனக் கருதப்படுகிறது.