தமிழ்நாட்டு கோவில்களை அம்மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டு கோவில்களை அம்மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி
தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது.
எதிர்கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் அங்கு ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக தேர்தல் பிரசாரத்தை பல வாரங்களுக்கு முன்பே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தொடங்கி விட்டன.
அந்தவகையில் தெலுங்கானாவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவங்கி வைத்தார். இதனையடுத்து நிஜாமாபாத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தெலங்கானா மாநில அரசையும், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவையும் கடுமையாக விமர்சித்தார்.
குற்றச்சாட்டு
அவர் பேசியதாவது “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அதை தாம் நிராகரித்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மாநில அரசால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை அம்மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது. கோயில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநீதியானது. ஆனால், சிறுபான்மையினரின் வழிபாட்டு தளங்கள் மீது அவர்கள் கைவைப்பதே இல்லை. அவற்றை அரசு கொள்கைகளுக்கும் கொண்டு வரமாட்டார்கள்.
ஆனால் கோயில்களை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார்கள். கோயில்களில் வரும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டை ஆளும் தனது கூட்டணிக் கட்சியிடம் பேசி கோயில்களை விடுவிக்க காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்குமா?” என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.