திடீரென வெடித்த சிதறிய ஹீலியம் பலூன்கள்… பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்..!
ஹைட்ரஜன் வாயுவைப் போலவே ஹீலியம் வாயுவும் காற்றைவிட லேசானது.காற்றிலுள்ள வாயுக்களில் பெரும்பகுதியான நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது ஹீலியம் மிகவும் லேசானதாக இருப்பதால், ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்கள் மேலெழுகின்றன. இதனால், பிறந்த நாள் கொண்டாட்டம் போன்ற பார்ட்டிகளில் ஹீலியம் பலூன்களைக் கொத்து கொத்தாகக் கட்டி வைக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் மணமகள் ஹீலியம் பலூன்களை தனது உடலில் கட்டிக் கொண்டு காற்றில் மிதந்து வரும் நிகழ்வுகளும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூரில் உள்ள பெலத்தூர் பகுதியில் ஆதித்யா குமார் என்பவர் தனது மூன்று வயது மகளின் பிறந்தநாளை சனிக்கிழமை இரவு வீட்டில் கொண்டாடியுள்ளார். இதையொட்டி, அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். அப்போது, வீட்டின் மொட்டை மாடி மேல் பறக்கவிடப்பட்டிருந்த ஹீலியம் பலூன், திடீரென உயர்மின் அழுத்த கம்பியில் உரசியதில் வெடித்து சிதறியது.அப்போது, தீப்பொறி விழுந்து மொட்டை மாடி படிக்கட்டில் நின்றிருந்த ஆதித்யா குமார், அவரது மகள் மட்டுமின்றி, பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த 2 வயதான இஷான், 7 வயதான தயான் சந்த் மற்றும் 8 வயது நிரம்பிய சஞ்சய் ஆகியோருக்கு கை மற்றும் முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெடித்துச் சிதறிய பலூனில் ஹீலியம் வாயுவிற்கு பதிலாக, வேறு ஏதாவது வாயு நிரப்பப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.