20கோடி ரூபா நட்டம் : கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் : லக்ஷ்மன் கிரியெல்ல
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு வேலைத்திட்டம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(04) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
10 கணக்காய்வு அறிக்கைகள்
“கணக்காய்வாளர் நாயகம் இதுவரை 10 கணக்காய்வு அறிக்கைகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி இருக்கிறார். அந்த அறிக்கைகளில் நாட்டுக்கு 20கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
ஆனால் இந்த அறிக்கைகள் தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளாமல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறி்க்கைகள் குறித்த நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி அங்கு ஆராய்ந்த பின்னர் அதனை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்து சட்டமா அதிபருக்கு அனுப்புமாறு நாங்கள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது எதிர்க்கட்சித்தலைவரின் யோசனைக்கமைய பிரேரணை ஒன்றை கொண்டுவந்திருந்தோம்.
அத்துடன் 20கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்த நட்டத்துக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சீனி மோசடியில் 15கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்தோம். ஒன்றும் இல்லை.” என்றார்.
இதற்கு சபைமுதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜந்த பதிலளிக்கையில், கணக்காய்வாளர் நாயகத்தினால் நாடடாளுமன்றத்துக்கு அனுப்பி இருக்கும் அறிக்கைகளை கோப் குழுவுக்கு அனுப்பி, அங்கு இதுதொடர்பில் ஆராய்ந்த பின்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அதன் பின்னர் அதனை சட்டமா அதிபருக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றார்.