“சிறை நிரப்பும் போராட்டம்” – தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், கடந்த 3ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து விளக்க செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் மாநில தலைவர் மணிவண்ணன், மாநில பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் தமிழ்நாடு முழுவதும் இருந்து கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காமராஜ் பாண்டியன், “தமிழ்நாடு முழுவதும் உள்ள 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களை எம்.எஸ்.சி மற்றும் ஏ.எல்.பி திட்டங்களின் கீழ், விவசாய உபகரணங்களை வாங்க கட்டாயப்படுத்துவதை அரசு கைவிட வலியுறுத்தி கடந்த மாதம் 26ஆம் தேதி அனைத்து மண்டல இணை பதிவாளர்களிடம் மனு அளித்ததாக தெரிவித்தார். கோரிக்கை நிறைவேறாததை அடுத்து அக்டோபர் 3 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார். அதே போன்றும் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
தங்களின் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வரும் 9ஆம் தேதி அன்று 7 மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வரும் 12ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.