குடியேற்றக் கொள்கையிலிருந்து விலகல்: எல்லைச் சுவா் எழுப்ப பைடன் அரசு அனுமதி
அமெரிக்காவின் தெற்கு டெக்ஸாஸ் எல்லையில் தடுப்புச் சுவா் அமைப்பதை அனுமதிக்கும் வகையில் 26 சட்டத் தடைகளை அந்த நாட்டு அரசு நீக்கியுள்ளது.
இது குறித்து தேசிய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டெக்ஸாஸ் மாகாணத்தின் ஸ்டாா் மாவட்டத்தில் தடுப்புச் சுவா்களை எழுப்ப அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, அந்தப் பகுதியில் கட்டுமானங்களை எழுப்புவதற்குத் தடையாக உள்ள 26 சட்டங்கள் விலக்கிவைக்கப்படுகின்றன.
அந்தப் பகுதி எல்லை வழியாக அண்மைக் காலமாக சட்டவிரோதமாக அகதிகள் வருவது வெகுவாக அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைச் சுவா் எழுப்புவதற்காக விலக்கப்பட்டுள்ள சட்டங்களில், சுத்தமான காற்றுப் பாதுகாப்புச் சட்டம், குடிநீா் பாதுகாப்புச் சட்டம், அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை அடங்கும்.