இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் படுகொலை: வெளியான காரணம்
இலங்கையர்கள் மூவர் மலேசியாவின் செந்தூலில் படுகொலை செய்யப்பட்டதற்கு பணம் தொடர்பான பிரச்சினைகளே காரணம் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கோலாலம்பூர் காவல்துறையின் தலைமை அதிகாரி அல்லாவுதீன் அப்துல் மஜித்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையர்கள் மூவர் கடந்த 22 ஆம் திகதி மலேசியாவின் செந்தூலில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், இது தொடர்பான விசாரணைகள் கோலாலம்பூர் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அத்துடன், குற்றவாளிகளை காப்பற்றுவதற்காக முன்வந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் நால்வர் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கோலாலம்பூர் காவல்துறையின் தலைமை அதிகாரி அல்லாவுதீன் அப்துல் மஜித்தால் உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.