இந்தியாவின் 5 நாள் கெடு… துதரக அதிகாரிகளை அவசரமாக வெளியேற்றிய கனடா: இறுகும் நெருக்கடி
இந்தியாவில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகம் கெடு விதித்திருந்த நிலையில், கனடா அவசர அவசரமாக நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகளை கனடா வெளியேற்றியது
கனடாவில் இந்திய தூதகர அதிகாரிகளின் எண்ணிக்கை அளவுக்கு இந்தியாவிலும் அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என இந்திய அரசாங்கம் கெடு விதித்திருந்தது.
கனடாவுக்கு இந்த விவகாரம் தொடர்பில் முடிவெடுக்க அக்டோபர் 10ம் திகதி வரையில் கால அவகாசமும் அளித்திருந்தது. இந்த நிலையில் டெல்லிக்கு வெளியே பணியாற்றி வந்த தமது தூதரக அதிகாரிகளை கனடா வெளியேற்றி கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூருக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கனேடிய தூதரக அதிகாரிகள் சிலருக்கு இந்தியாவில் சமூக ஊடகங்கள் ஊடாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்தே, எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் அதிகாரிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தலையிடுவது
முன்னதாக வியாழக்கிழமை, இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவிக்கையில், அதிக எண்ணிக்கையிலான கனேடிய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி அளிப்பதும், நாட்டின் உள் விவகாரங்களில் அவர்கள் தொடர்ந்து தலையிடுவதும் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்றார்.
கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என இந்தியா தரப்பில் முதல் முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டதும், கனடா பிரதமர் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சரக அலுவலகங்கள் உறுதி செய்யவில்லை.
மட்டுமின்றி, இந்தியாவுடனான மோதலை மேலும் இறுக்கமடைய செய்ய விரும்பவில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.