பூணூல் அணியாதவர்கள் கீழ் மக்களா? ஆளுநர் ஆர்.என். ரவிக்கு வலுக்கும் கண்டனங்கள்!
ஆளுநர் ஆர்.என். ரவி செயலுக்கு பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பூணூல் விவகாரம்
கடலூர், நந்தனார் பிறந்த கிராமம் ஆதனூர். இங்கு நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் முடிவில், 100 ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநருக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. தொடர்ந்து, இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடும் கண்டனம்
ஒடுக்கப்பட்ட மக்களில் சிலருக்குப் பூணூல் அணிவித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. பூணூல் அணியாதவர்கள் எல்லாம் கீழ் மக்கள் என்றும், பூணூல் அணிந்தவர்கள் மட்டுமே மேல் மக்கள் என்றும் சொல்லும் மனுதர்மத்தின் பேதத்தினை மீண்டும் ஒரு முறை உறுதிசெய்திருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாளவன் கூறியதாவது,
மேன்மைப்படுத்துகிறோம் எனும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவு படுத்துவது தான் சனாதனம். மேலும் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்?. பூணூல் அணிவிக்கப்பட்ட பட்டியலின மக்களை கோயில் பூசாரி ஆக்குவாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்ததன் மூலம் பூணூல் தான் புனிதத்தின் அடையாளம் என நிலைநாட்ட விரும்பும் கூட்டத்தினர் பொதுவாகவே அனைத்து மனிதர்களும் சமம் என்ற அரசமைப்பு சட்ட விழுமியத்திற்கு எதிராகவே உள்ளனர். ஆளுநர் ஆர்.என். ரவியும் இந்த நிகழ்ச்சியின் அங்கமாக இருந்துள்ளார். ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களை இழிவுபடுத்தும் இந்தச் செயலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.