கொழும்பில் பாரிய போராட்டத்திற்கு ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு
அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை கோரி இம் மாதம் ஒக்டோபர் 24ஆம் திகதி கொழும்பில் உள்ள மத்திய கல்வி அமைச்சுக்கு முன்னால் இடம்பெறும் பாரிய போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களை கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர் ஜெயராஜசிங்கம் போல்வின் அழைப்பு விடுத்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவை தீர்க்கப்படாமல் உள்ளதால் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
சம்பள நிலுவை தொடர்பில் அரசாங்கத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்திய போதும் இதுவரை தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவில்லை.
அதிபர் ஆசிரியர்களின் ஏனைய நிலுவைகள் மற்றும் நிர்வாகப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளமையால் அவற்றை தீர்க்கும் முகமாக அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதற்காக போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளோம்.
ஆகவே அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு நிரந்தர தீர்வை காணும் முகமாக ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அனைத்து ஆதிபர் ஆசிரியர்களும் கொழும்பில் இடம்பெறும் உரிமைப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட கல்வி வலயங்களுக்கான
செயலாளர்கள் கலந்து கொண்டனர்.