உலக நாடுகளுக்கு அடுத்த அச்சுறுத்தல்… எக்ஸ் (X) வைரஸை எதிர்த்து போராடுவது எப்படி?
கொரோனா வைரஸை தொடர்ந்து எக்ஸ் வைரஸ் உலக நாடுகளை அடுத்து அச்சுறுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது வீரியம் மிக்க வைரஸாக இருக்கும் சூழலில் இதற்கு எக்ஸ் என்று கற்பனை பெயரை உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளது. 2020, 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடியது.
கொரோனாவால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 1.20 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள வைரஸ் அதைவிட பாதிப்பை கடுமையாக ஏற்படுத்தும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த எக்ஸ் வைரஸ் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுக்காவிட்டால் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும் என்றும் பிரபல மருத்துவ வல்லுனர் டாக்டர் என்.கே. அரோரா கூறியுள்ளார்.
நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் அரோரா பொறுப்பில் இருக்கிறார். அவர் நியூஸ் 18க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- மரபணு ரீதியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது அவசியம். கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை தடுப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.
இந்தியாவிடம் தற்போது 6 விதமான தடுப்பூசிகள் உள்ளன. இதை வைத்துக் கொண்டு புதிதாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதிகபட்சமாக 250 நாட்களில் தடுப்பூசிகளை கண்டுபிடித்து விடலாம். புதிய எக்ஸ் வைரஸிற்கு தற்போது வரை எந்த தடுப்பு மருந்துகளும் இல்லை. இதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா தீவிரம் காட்டும்.
மருந்து துறையில் இந்தியாதான் முன்னணியில் இருக்கிறது. உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தாய் இந்தியா தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக எக்ஸ் வைரஸ் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பிரிட்டனை சேர்ந்த பிரபல மருத்துவ வல்லுனர் கேட் பிங்ஹாம் எக்ஸ் வைரஸ் அதிகபட்சமாக 5 கோடி பேர் வரையில் உயிர்களை பறிக்கக் கூடும் என்று கூறியதாக தகவல்கள் பரவின.