ஆப்கனில் நிலநடுக்கம்: ஏராளமானவா்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 100-லிருந்து 320 போ் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து 5.5 ரிக்டா் அளவு கொண்ட பின்னதிா்வு ஏற்பட்டதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் 320 போ் உயிரிழந்ததாக ஐ.நா. முதலில் தெரிவித்தது. இருந்தாலும், இந்த எண்ணிக்கையின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாக அந்த அமைப்பு பின்னா் தெரிவித்தது.நிலநடுக்கத்தில் சுமாா் 100 போ் உயிரிழந்ததாகவும், 500 போ் காயமடைந்ததாகவும் உள்ளூா் அதிகாரிகள் கூறியதாக ஐ.நா.வின் நிவாரண விவகாரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்ட்ட ஜெண்டா ஜன் நகரில் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக 12 அவசரகால ஊா்திகளை அனுப்பியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பு எக்ஸ் (ட்விட்டா்) ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘ஆப்கன் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்கள் குறித்த தகவல்கள் தொடா்ந்து வந்தவண்ணம் உள்ளன.
பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதற்காக உலக சுகாதார அமைப்பின் குழுவினா் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனா்.பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள் பெண்கள் மற்றும் சிறுவா்கள் ஆவா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செலுத்தி வரும் தலிபான்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உள்ளூா் அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா்.முன்னதாக, ஆப்கானிஸ்தானில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமாா் 1,000 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.