;
Athirady Tamil News

பட்டாசு கடையில் தீ விபத்து; தமிழர்கள் 13 பேர் பலி – முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

0

அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

வெடிவிபத்து
கர்நாடக – தமிழக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில் பட்டாசு குடோனில் நேற்று மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தீப்பிடித்து மளமளவென நாலாபுறமும் பரவி பட்டாசு குடோன் எரிந்து நாசமானது.

பட்டாசு கடை நடத்தி வரும் நவீன் என்பவர் தனது ஊழியர்களுடன் கன்டெய்னர் வாகனத்தில் இருந்து பட்டாசு பெட்டிகளை இறக்கிக்கொண்டிருக்கும்போது இந்த எதிர்பாரா விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

மு.க. ஸ்டாலின்
இந்நிலையில் இந்த விபத்து குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு – கர்நாடக எல்லையில், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இயங்கி வந்த பட்டாசுக் கடையில் இன்று (07.10.2023) ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர் என்ற மிகுந்த வேதனையான செய்தியினைக் கேட்டு துயரமடைந்தேன்.

இச்சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், வருவாய் மற்றும் காவல்துறை அலுவலர்களை விபத்து நடந்த இடத்திற்குச் சென்று தேவைப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க அனுப்பி வைத்துள்ளேன். மேலும், இச்சம்பவம் குறித்து நமது தலைமைச் செயலாளர், கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளருடன் பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ளவும், மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரவும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணியையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனையும் அனுப்பி வைத்துள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.