தமிழகத்தில் உள்ள எந்த குளத்திலும் தாமரை மலராது – கனிமொழி எம்.பி பேச்சு!
தமிழகத்தில் உள்ள எந்த குளத்திலும் தாமரை மலராது என்று திமுக எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.
கனிமொழி எம்.பி
தூத்துக்குடி மாவட்டத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலைய திறப்பு விழாவில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டார்.
அவருடன் அமைச்சர் கே.என். நேரு, கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாலாஜி சரவணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் மேடையில் கனிமொழி எம்.பி பேசியதாவது “தூத்துக்குடி அண்ணா பஸ் நிலையம் கட்டிட பணிகளை விரைந்து, சிறப்பாக முடிக்க வேண்டும் என்று பலமுறை ஆய்வு செய்து உள்ளோம். ஒரு ஊரில் பஸ் நிலையம் என்பது அந்த ஊரின் அடையாளம். மக்களின் வாழ்க்கையோடு இணைந்து இருக்கும். இதிலும் அரசியல் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
தாமரை மலராது
எந்த இடத்தில் பிரச்சினையை கிளப்பலாம் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இங்கேயும் சிலர் பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எந்த திட்டமும் மத்திய அரசுக்கு மட்டும் சொந்தம் கிடையாது.
எல்லா திட்டத்திலும் மாநில அரசின் பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது. அதனை யாரும் மறுக்க முடியாது. இதில் எங்கள் உழைப்பும் உள்ளது. நீங்கள் கொடுக்கின்ற பணம், நாங்கள் கொடுக்கும் ஜி.எஸ்.டி. வரிப்பணம்தான். அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு பெயர் வைத்த வைத்துக் கொள்கிறது. தமிழக மக்கள் உண்மையை அறிந்தவர்கள்.
நிச்சயமாக எந்த மாற்றமும் இங்கு வராது. தமிழகத்தில் உள்ள எந்த குளத்திலும் தாமரை மலராது. விழிப்போடு இருங்கள். தமிழகத்தை காப்பாற்றுங்கள். நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து அரணாக நின்று தமிழகத்தை தமிழ் உணர்வோடு காப்போம்” என்று பேசியுள்ளார்.