முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்: நீதித்துறைக்கே மிகப்பெரும் கரும்புள்ளி – சாணக்கியன்
தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு நீதவான் நாட்டைவிட்டுச் சென்றிருக்கின்றார் என்றால் அது இலங்கையின் நீதித்துறைக்கே மிகப்பெரிய கரும்புள்ளியாக பார்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருக்கின்றமை தொடர்பில் கட்சி என்ற ரீதியில் நாங்கள் எந்தவொரு தீர்மானம் தொடர்பிலும் ஆராயவில்லை.
சர்வதேச விசாரணை அவசியம்
ஆனால் பொதுவாக இந்த விடயம் எங்களுடைய நீதித்துறைக்கு மிகப்பெரிய ஒரு கரும்புள்ளி என்று சொல்லலாம்.
குறிப்பாக, தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு இல்லை என தெரிவித்தும் இந்த நாட்டினுடைய இளைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை கேள்விப்பட்டிருக்கின்றோம்.
ஆனால் ஒரு நீதிபதி நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருக்கின்றார் என்றால் இதுதான் முதன்முறையாக கேள்விப்பட்டிருக்கின்றோம்.
உண்மையில் இந்த விவகாரத்தில் சில சில வழக்குகளுக்கு அழுத்தங்கள் வந்ததாக எல்லாம் ஊடகங்களில் பார்க்கக் கிடைத்தது. சனல் 4இல் வந்த விடயங்களிலும் இவ்வாறு நீதித்துறைக்கு எதிராக சில சில அழுத்தங்கள் தொடர்பில் குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றது.
இதன் காரணமாகத்தான் நாங்கள் கூறுகின்றோம், இவ்வாறான விடயங்களுக்கு ஒரு சர்வதேச விசாரணை அவசியம் வேண்டும் என்று என குறிப்பிட்டார்.