லடாக் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி! படுதோல்வியை சந்தித்த பாஜக
லடாக்கின் கார்கில் மலை கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.
கார்கில் தேர்தல்
ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் துணை நிலை ஆளுநரின் நிர்வாகத்தில் உள்ளன.
இந்த நிலையில் லடாக்கின் கார்கில் மாவட்டத்தில், தற்போதைய கவுன்சிலின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அங்கு தேர்தல் நடந்தது.
கடந்த 4ஆம் திகதி நடந்த இந்த தேர்தலில், பாஜக வலுவாக இருந்த இடங்களில் மட்டும் காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து, மற்ற இடங்களில் தனித்தனியாகவும் போட்டியிட்டன.
இதனால் பல இடங்களில் மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 95,388 வாக்காளர்களில் 74,026 பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியதாக செய்தி நிறுவனமான PTI கூறியது.
காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி
நேற்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் காங்கிரஸ் – இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டு கட்சி 12 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்றது.
அதேபோல் சுயேட்சை 2 இடங்களில் வென்றது. லடாக் யூனியன் பிரதேசமான பிறகு நடந்த முதல் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளன.